கொரோனா கால ஊழலால் பா.ஜ., தலைவர்களுக்கு...கிரிமினல் வழக்கு பதிவு செய்ய ஆணையம் பரிந்துரை
கொரோனா கால ஊழலால் பா.ஜ., தலைவர்களுக்கு...கிரிமினல் வழக்கு பதிவு செய்ய ஆணையம் பரிந்துரை
ADDED : செப் 01, 2024 11:37 PM

பெங்களூரு: கொரோனா காலத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம், முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளதால், பா.ஜ., தலைவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும், ஆணையம் பரிந்துரை செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2020 மற்றும் 2022ல், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன் கிடைக்காமல் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
அப்போது ஆட்சியில் இருந்த, பா.ஜ., அரசு கொரோனா பரவலை தடுக்க, மருத்துவ உபகரணங்கள் வாங்க 4,000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியது.
இதில் 2,200 கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் குற்றம் சாட்டியது. முதல்வர்களாக இருந்த எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, சுகாதார அமைச்சராக பணியாற்றிய சுதாகர் ஆகியோருக்கு ஊழலில் தொடர்பு இருப்பதாக, சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
சிறை உறுதி
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கொரோனா கால ஊழல் குறித்து விசாரிக்கப்படும்' என்று, சித்தராமையா கூறினார்.
அதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், கொரோனா கால ஊழலை விசாரிக்க நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது கூட, 'கொரோனா கால ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை கிடைத்தால், சுதாகர் சிறைக்கு செல்வது உறுதி' என்றும், சித்தராமையா கூறி இருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு காவிரி இல்லத்தில் சித்தராமையாவை, நேற்று முன்தினம் இரவு சந்தித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, கொரோனா கால ஊழல் தொடர்பாக, 1,722 பக்கங்கள் அடங்கிய இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். பின், அமைச்சர்களுடன், சித்தராமையா ஆலோசனை நடத்தினார். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதித்ததாக சொல்லப்படுகிறது.
பதிவு இல்லை
இந்நிலையில், விசாரணை ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், 'கொரோனாவை கட்டுப்படுத்த அரசு ஒதுக்கிய நிதியில் 1,754 கோடி ரூபாயை முறையாக நிர்வகிக்கவில்லை. செலவு செய்த பணம் குறித்து முறையான பதிவுகள் இல்லை.
தேசிய சுகாதார இயக்ககம், மருத்துவ கல்வி இயக்ககம், பெங்களூரு மாநகராட்சி, கர்நாடக மருத்துவ கழகம் உட்பட 11 துறைகள் இணைந்து ஊழல் செய்து உள்ளன. தவறு செய்தவர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யலாம்' என்று பரிந்துரை செய்து இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கை குறித்து, சுகாதார துறை முன்னாள் அமைச்சரும், தற்போதைய பா.ஜ., - எம்.பி.,யுமான சுதாகர் நேற்று அளித்த பேட்டியில், ''நான் சுகாதார அமைச்சராக இருந்த போது, கொரோனாவை கட்டுப்படுத்த இரவு, பகல் பாராமல் உழைத்தேன். பல நாட்கள் உணவு கூட சாப்பிடவில்லை. இப்போது அறிக்கை தான் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
''அறிக்கையில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. கொரோனா ஊழலை காங்கிரஸ் அரசால் நிரூபிக்க முடியாது. இந்த அரசு நீண்ட காலம் நீடிக்காது. அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. காங்கிரஸ் அரசில் உள்ளவர்கள் அனைவரும் ஹரிசந்திரனா,'' என்றார்.
'மூடா'வில் இருந்து மனைவிக்கு சட்டவிரோதமாக 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடி வரும் நிலையில், கொரோனா ஊழல் தொடர்பான அறிக்கை, காங்கிரஸ் அரசுக்கு அஸ்திரம் போல அமைந்து உள்ளது.
நடவடிக்கை
இதை வைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியாளர்கள் தயாராகி வருகின்றனர். இதுதவிர எஸ்.ஐ., தேர்வு முறைகேடு; பிட்காயின் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கைகளையும், விரைவில் தாக்கல் செய்யும்படி, அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
'இதனால், மாநிலத்தில் உள்ள பா.ஜ., தலைவர்களுக்கு சிக்கல் காத்திருக்கிறது' என, அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.