ADDED : ஆக 04, 2024 10:58 PM
புதுடில்லி:“அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை குறித்து பல முறை கடிதம் அனுப்பியும் துணைநிலை கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை,”என, டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் கூறினார்.
இதுகுறித்து, பரத்வாஜ் கூறியதாவது:
டில்லி அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தி, துணைநிலை கவர்னர் சக்சேனாவுக்கு பலமுறை கடிதம் அனுப்பியுள்ளேன்.
ஆனால், சக்சேனா அந்தக் கடிதங்களுக்கு பதிலும் அனுப்பவில்லை; டாக்டர்களும் நியமிக்கப்படவில்லை. டில்லி அரசு மருத்துவமனையில் டாக்டர் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் நியமனம் துணைநிலை கவர்னர் கட்டுப்பாட்டில் உள்ளது.
டில்லி அரசு மருத்துவமனைகளில் 292 டாக்டர் பணியிடங்கள் மற்றும் 234 தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதுபற்றி கடந்த மாதம் 26ம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளேன்.
ஒப்பந்த அடிப்படையில் கூட டாக்டர்களை நியமிக்கலாம் என உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கவர்னரிடம் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.