முதல்வர் ஆதரவாளர்கள் மீது லட்சுமி ஹெப்பால்கர் புகார்
முதல்வர் ஆதரவாளர்கள் மீது லட்சுமி ஹெப்பால்கர் புகார்
ADDED : ஜூலை 06, 2024 05:48 AM

பெங்களூரு: முதல்வர் மாற்றம், கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டும் என, நெருக்கடி கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, காங்கிரஸ் மேலிடத்தில் மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக காங்கிரசில், சமீப நாட்களாக முதல்வர் மாற்றம், கூடுதல் துணை முதல்வர் பதவி பற்றிய சர்ச்சை, சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் சிவகுமாரின் எச்சரிக்கைக்கும் அமைச்சர்கள், தலைவர்கள் பணியவில்லை. குறிப்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா, வாயை அடக்கவில்லை.
முதல்வருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும், கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்க நெருக்கடி தரும் அமைச்சர்கள் மீது, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அதிருப்தி அடைந்துள்ளார். இவர், துணை முதல்வர் சிவகுமார் கோஷ்டியில் அடையாளம் காணப்படுகிறார்.
சமீபத்தில் டில்லிக்கு சென்ற லட்சுமி ஹெப்பால்கர், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொது செயலர் வேணுகோபாலை சந்தித்தார்.
அப்போது, 'சில அமைச்சர்கள் தேவையின்றி, முதல்வர், கூடுதல் துணை முதல்வர் பதவி குறித்து பேசுகின்றனர். இவர்களால் கட்சியில் குழப்பம் அதிகரிக்கிறது.
எங்களுக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் என, இருவருவே முக்கியம். இருவரும் சமமானவர்கள். ஆனால் சிலரின் செயலால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களை அடக்கி வையுங்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் மீது, லட்சுமி ஹெப்பால்கர் அதிகமான புகார் பட்டியலை வாசித்தாக கூறப்படுகிறது. அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.