ADDED : ஜூலை 08, 2026 04:11 PM

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், லஷ்கர் – இ – தொய்பா அமைப்பின் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு – காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள சையத்போரா வனப்பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை தகவல் அளித்தது. இதன்படி, அப்பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஜாகிர் கனாய், அவரது கூட்டாளி லத்தீப் பட் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். நான்கு நாட்கள் சண்டை நடந்த நிலையில், லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஜாகிர் கனாயை பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக்கொன்றனர். தப்பியோடிய பயங்கரவாதியை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது. சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
