மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து சட்ட கல்லுாரி மாணவர் தற்கொலை
மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து சட்ட கல்லுாரி மாணவர் தற்கொலை
ADDED : மார் 22, 2024 06:54 AM

பெங்களூரு: பெங்களூரு அத்திகுப்பே மெட்ரோ ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து, சட்ட கல்லுாரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது ஒயிட்பீல்டு - செல்லகட்டா; மாதவரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையில், மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன. தினமும் 6 லட்சம் பேர், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரயில் தண்டவாளம் மின்சாரத்தில் இயங்குகிறது.
இதனால் நடைமேடையை ஒட்டி செல்ல, பயணியருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்களில் ரயில் வந்து நின்ற பின்னரே, நடைமேடை அருகில் செல்ல, பயணியர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெங்களூரு ஒயிட்பீல்டு - செல்லகட்டா வழித்தடத்தில் உள்ளது அத்திகுப்பே ரயில் நிலையம். நேற்று மதியம் 2:10 மணிக்கு ஒயிட்பீட்டில் இருந்து செல்லகட்டா நோக்கி, மெட்ரோ ரயில் வந்தது. அத்திகுப்பே ரயில் நிலையத்திற்குள், ரயில் வந்த போது, நடைமேடையில் நின்ற ஒரு வாலிபர், திடீரென ரயில் முன்பு பாய்ந்தார்.
ரயிலில் சிக்கி சில அடி துாரம் இழுத்து செல்லப்பட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணியர் அலறினர். உடனடியாக மின் இணைப்பை, மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் துண்டித்தனர். சந்திரா லே - அவுட் போலீசார், ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்தனர்.
வாலிபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உடல், இரண்டு துண்டாகி வாலிபர் இறந்தது தெரிந்தது.
அவரது உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாகடி ரோடு - அத்திகுப்பே இடையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
அத்திகுப்பே ரயில் நிலைய நுழைவு வாயில் கதவும் மூடப்பட்டது. என்ன நடக்கிறது என்று தெரியாமல், நுழைவு வாயில் முன், பயணியர் காத்து நின்றனர்.
மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரிஷும், ரயில் நிலையத்திற்கு வந்து அதிகாரிகளிடம் விசாரித்து, தகவல் பெற்று கொண்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர், மும்பையை சேர்ந்த துருவ் ஜதின் தக்கர், 19 என்பதும், தேசிய சட்ட கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்ததும் தெரிந்தது. துருவ் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.
பாதுகாப்பு குறைபாடு?
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில், சமீபகாலமாக ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. தண்டவாளத்தில் குதிப்பது, தற்கொலை முயற்சி செய்வது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பயணியருக்கு, பாலியல் தொல்லை கொடுப்பது நடக்கிறது.
இதற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று, பயணியர் குற்றம் சாட்டி உள்ளனர். தண்டவாளம் அருகில் பயணியர் செல்வதை தடுக்கும் வகையில், தடுப்பு அமைக்க வேண்டும் என்றும், கோரிக்கை எழுந்து உள்ளது.
பரிதவித்த பயணியர்
மாகடி ரோடு - அத்திகுப்பே இடையில், ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணியர் பரிதவித்தனர். பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களை தேடி ஓடினர். மாணவர் துருவ் உடல் தண்டவாளத்தில் இருந்து எடுக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்திற்கு பின்னர், ரயில் சேவை மீண்டும் துவங்கியது.

