'நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வக்கீல்கள் மீது வழக்கு தொடர முடியாது'
'நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வக்கீல்கள் மீது வழக்கு தொடர முடியாது'
ADDED : மே 15, 2024 12:53 AM
புதுடில்லி,
வழக்கறிஞர்கள் மீது, சேவை குறைபாடு உள்ளதாக, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
டாக்டர்கள் போன்ற தொழில்முறை நிபுணர்கள் மீது இந்த சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று 1995ல் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யவும், உச்ச நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்துள்ளது.
ஒப்பந்தம்
வழக்கறிஞர்கள் மீது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 1986ன் கீழ் வழக்கு தொடர முடியும் என, தேசிய நுகர்வோர் குறைதீர்வு ஆணையம், 2007ல் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் பீலா திரிவேதி, பங்கஜ் மிட்டல் அமர்வு விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள தாவது:
கடந்த 1986ல் அறிமுகம் செய்யப்பட்டு, 2019ல் திருத்தப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை தடுப்பதை நோக்கமாக கொண்டது.
'புரபஷன்' எனப்படும் தொழில்முறை நிபுணர்கள் மற்றும் வணிகம் -- தொழிலுக்கு இடையேயான சரியான புரிதல் தேவை.
தொழில்முறை நிபுணத்துவம் என்பது உயரிய படிப்பறிவு மற்றும் தொழில் திறன், அதிகளவு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
அந்த வகையில், வழக்கறிஞர் தொழிலானது, ஒரு தனித்துவமான புரபஷன் ஆகும்.
வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு தொடர்வோர் இடையேயான ஒப்பந்தம் தனிப்பட்டது. வழக்கு தொடர்வோர் சார்பில், அவர்களுடைய பிரதிநிதிகளாக நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர்.
வழக்கு தொடர்வோரின் ஆலோசனைகள், அறிவுறுத்தல்களை பெற்று, அதனடிப்படையிலேயே அவர்கள், அவர்களுடைய சார்பில் நீதிமன்றங்களில் வாதிடுகின்றனர்.
அதனால், இந்த விஷயத்தில் அனைத்து முடிவையும் எடுப்பது வழக்கு தொடுப்பவர்களே. அவர்களுடைய பிரதிநிதியாகவே, வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.
அதனால், இங்கு எந்த சேவை குறைபாடு தொடர்பாகவும், நுகர்வோர் சட்டத்தின் அடிப்படையில், வழக்கறிஞர்கள் மீது வழக்கு தொடர முடியாது.
அதே நேரத்தில் அலட்சியமாக செயல்பட்டது தொடர்பாக, மற்ற சட்டங்களின் கீழ், அவர்கள் மீது வழக்கு தொடர முடியும்.
விசாரணை
டாக்டர்களின் சேவை குறைபாடு தொடர்பாக, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
கடந்த, 1995ல் அளித்த உத்தரவில், டாக்டர்கள் உள்ளிட்ட தொழில்முறை நிபுணர்கள் மீது, நுகர்வோர் சட்டத்தில் வழக்கு தொடர முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து பெரிய அமர்வின் விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை செய்கிறோம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

