ஓட்டுப்பதிவு சதவீதத்தை கொண்டு மனக்கணக்கு போடும் தலைவர்கள்
ஓட்டுப்பதிவு சதவீதத்தை கொண்டு மனக்கணக்கு போடும் தலைவர்கள்
ADDED : மே 09, 2024 05:19 AM
பெங்களூரு : லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதத்தை கொண்டு, அரசியல் கட்சி தலைவர்கள், வெற்றி கணக்கு போடுகின்றனர்.
கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல் 16, மே 7 ஆகிய இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. 2019லும் இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது.
அப்போது, பா.ஜ., - 25, காங்கிரஸ், ம.ஜ.த., பா.ஜ., ஆதரவு சுயேச்சை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. இந்த வெற்றியை பா.ஜ., மேலிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றி மூலம், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கை ஓங்கியது.
தென் மாநிலங்களில், கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு உள்ளது என்பதும் நிரூபணமானது. இம்முறை பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என, அக்கட்சித் தலைவர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.
மற்றொரு பக்கம் வாக்குறுதித் திட்டங்களை நம்பி தேர்தலை சந்தித்த காங்கிரஸ், 20 தொகுதிகளில் வெற்றி உறுதி என, ஆளும்கட்சித் தலைவர்கள் சொல்கின்றனர். ஆனால், எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று மூன்று கட்சித் தலைவர்களுமே தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர்.
முதல் கட்டம், இரண்டாம் கட்டம் தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதத்தை கொண்டு, எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கணித்து வருகின்றனர்.
இதற்காக, பூத் வாரியாக பதிவான ஓட்டுப்பதிவு விபரங்களை, கட்சியின் பூத் ஏஜன்ட்கள் மூலம் பெற்று கணக்கு போட்டு வருகின்றனர்.
அந்த கணக்கு படி, சில வேட்பாளர்கள் மகிழ்ச்சியிலும்; சில வேட்பாளர்கள் விரக்தியிலும் உள்ளனர். ஒரு சிலரோ ஜூன் 4ம் தேதி வரை காத்திருப்போம் என்று முடிவு செய்துள்ளனர்.
இன்னும் சிலர் தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்று ஜோதிடர்களை சந்தித்து ஆலோசனை பெறுகின்றனர்.