மைசூரு சாமுண்டி மலையில் தீ குட்டிகளுடன் சிறுத்தை ஓட்டம்
மைசூரு சாமுண்டி மலையில் தீ குட்டிகளுடன் சிறுத்தை ஓட்டம்
ADDED : பிப் 22, 2025 10:39 PM

மைசூரு : ''மைசூரு சாமுண்டி மலையில் வேண்டுமென்றே யாரோ தீ வைத்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டவுடன், சிறுத்தைகள், தன் குட்டிகளுடன் வேறு இடத்துக்கு ஓட்டம் பிடித்தன,'' என மைசூரு துணை பாதுகாப்பு அதிகாரி பசவராஜ் தெரிவித்தார்.
மைசூரு சாமுண்டிமலைக்கு உட்பட் உத்தனஹள்ளி வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ, மளமளவென பரவியது. ஆறு மணி நேரம் போராடி தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்.
இது தொடர்பாக நேற்று வனத்துறை துணை பாதுகாப்பு அதிகாரி பசவராஜ் அளித்த பேட்டி:
சாமுண்டி மலையில் ஏற்பட்ட தீ, மனிதரால் ஏற்பட்டதாகும். வனப்பகுதியில் வேண்டுமென்றே யாரோ தீ வைத்துள்ளனர். காற்றின் வேகம், வெப்பம் அதிகமாக இருந்ததால், தீயை அணைப்பது சிரமமாக இருந்தது.
தீயணைப்பு படையினரும், வனத்துறையினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டவுடன், சிறுத்தைகள், தன் குட்டிகளுடன் வேறு இடத்துக்கு சென்றது தெரிய வந்துள்ளது.
இரவு முழுதும் மூன்று வனத்துறை குழுவினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். சாமுண்டி மலை, 1,516 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். வனத்தின் நான்கு பகுதிகளில் இருந்தும், வனத்துக்குள் செல்வதற்கு சாலைகள் உள்ளன.
தீ விபத்து காரணமாக, தேவிகெரே, கொல்லஹல்லா பகுதியில் 35 ஏக்கர் வனப்பகுதி முற்றிலுமாக எரிந்துவிட்டன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கோடை காலத்தில் சாமுண்டி மலை பகுதியில் தீ மூட்ட வேண்டாம்.
மைசூரு மாவட்டத்தில் இதுவரை டி.நரசிபுராவில் உள்ள உக்கலகெரே மலையிலும், நஞ்சன்கூட்டில் உள்ள காவலாண்டே பகுதி என, 19 சிறிய காட்டுத் தீ சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், சாமுண்டி மலையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.