கூண்டில் சிக்கிய சிறுத்தை காட்டு தீயில் மூச்சு திணறி பலி
கூண்டில் சிக்கிய சிறுத்தை காட்டு தீயில் மூச்சு திணறி பலி
ADDED : மார் 05, 2025 11:07 PM

துமகூரு: மதேஹள்ளி கிராமத்தில், வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. ஆனால், வனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், சிறுத்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது.
துமகூரு மாவட்டம், திப்டூரின் கிப்பனஹள்ளி பேரூராட்சியின் கிராமப் பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தைகள் நுழைந்து, கால்நடைகளை தாக்கிக் கொன்று வந்தன. இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள், சிறுத்தை நடமாட்டம் அதிகமுள்ள பகுதியை அடையாளம் கண்டனர்.
மதேஹள்ளி கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா என்பவருக்கு சொந்தமான நிலத்தில், வனப்பகுதி அருகே கூண்டு அமைத்திருந்தனர்.
இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. மெல்ல பரவிய தீ, காற்றின் வேகத்தால் மளமளவென பரவி, பின் அணைந்தது.
நிலத்தின் சொந்தக்காரர் நாராயணப்பா அங்கு வந்து பார்த்தபோது, கூண்டுக்குள் 3 - 5 வயதுக்கு உட்பட்ட ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த அதிகாரிகள், சிறுத்தையை பரிசோதித்தனர்.
வனத்தீ விபத்தால் எழுந்த புகை காரணமாக, சிறுத்தை மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
'கூண்டுக்குள் சிக்கியது தெரிந்திருந்தால் சிறுத்தையை காப்பாற்றியிருக்கலாம்' என, அவர்கள் வருத்தமடைந்தனர். கே.பி., கிராஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
'சிறுத்தை இறந்ததற்கு வனத்துறையினர் தான் காரணம். சிறுத்தை பிடிபட்டதா இல்லையா என்பது கூட தெரியாமல், வனத்துறையினர் உள்ளனர்' என, கிராமத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.