பிரதமர் மோடி, தேஜ கூட்டணி தலைமை மீதான நம்பிக்கை; பீஹார் தேர்தல் முடிவு குறித்து அமித்ஷா பெருமிதம்
பிரதமர் மோடி, தேஜ கூட்டணி தலைமை மீதான நம்பிக்கை; பீஹார் தேர்தல் முடிவு குறித்து அமித்ஷா பெருமிதம்
UPDATED : நவ 14, 2025 05:18 PM
ADDED : நவ 14, 2025 05:17 PM

புதுடில்லி: பீஹார் மக்கள் தீர்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பிரதமர் மோடியின் தலைமை மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில், பாஜ, நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இது தொடர்பாக அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் முடிவுகள் வளர்ச்சி அடைந்த பீஹார் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு பீஹாரியின் வெற்றி. காட்டு ராஜ்ஜியத்தையும், திருப்திப்படுத்தும் அரசியலையும் கடைப்பிடிப்பவர்கள், அவர்கள் என்ன மாறுவேடத்தில் வந்தாலும், கொள்ளையடிக்க வாய்ப்பு கிடைக்காது.
பிரதமர் மோடி, நிதிஷ் குமார் மற்றும் தேஜ கூட்டணியின் தலைவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்கள் அயராத கடின உழைப்பின் மூலம் இந்த முடிவை நனவாக்கிய பீஹார் பாஜவினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
பிரதமர் மோடி தலைமையிலான தேஜ கூட்டணி அரசு இன்னும் அதிக அர்ப்பணிப்பு உடன் செயல்படும் என பீஹார் மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன. பீஹார் மக்களின் ஒவ்வொரு ஓட்டும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வளங்களை சுரண்டும் ஊடுருவல்காரர்கள் மற்றும் அவர்களின் அனுதாபிகளுக்கு கிடைத்த மரண அடியாகும். ஓட்டு வங்கி நலன்களுக்காக ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பவர்களுக்கு பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அவசியம். அதற்கு எதிரான அரசியலுக்கு இடமில்லை என்ற முழு நாட்டின் உணர்வையும் பீஹார் மக்கள் பிரதிபலித்துள்ளனர். அதனால்தான் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இன்று பீஹாரில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது.அறிவு, கடின உழைப்பு மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாவலர்களான பீஹார் மக்களுக்கு கோடான கோடி வணக்கங்கள்.
பீஹார் மக்களிடமிருந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த இந்த மகத்தான தீர்ப்பு, பீஹாரில் வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலனுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பிரதமர் மோடியின் தலைமை மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக, மோடி பீஹாருக்காக தாராளமாக உழைத்துள்ளார். மேலும் நிதிஷ் குமார் பீஹாரை காட்டாட்சியின் இருளில் இருந்து வெளியே கொண்டு வர பாடுபட்டுள்ளார். இந்த தீர்ப்பு வளர்ச்சியடைந்த பீஹார் என்ற உறுதிப் பாட்டிற்கானது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
முன்பே கணித்த அமித்ஷா!
பீஹார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசும் போதும், ஆங்கில செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும்போதும், பீஹாரில் 160க்கும் மேற்பட்ட இடங்களில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என்று அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். அவர் அன்று கூறியது போலவே, அதையும் விட அதிகமாக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
ஆட்டம், பாட்டம்!
பீஹார் தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதை பாட்னாவில் தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜ தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிந்த உடனே, லட்டுக்கள் தயார் செய்யும் பணியில் பாஜவினர் ஈடுபட்டிருந்தனர். தற்போது தேஜ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில், லட்டுக்களை மக்களுக்கு வழங்கியும், ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் பாஜவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

