ஜம்மு காஷ்மீர் இடைத்தேர்தல்: முதல்வர் தொகுதியில் மண்ணைக் கவ்வியது ஆளுங்கட்சி
ஜம்மு காஷ்மீர் இடைத்தேர்தல்: முதல்வர் தொகுதியில் மண்ணைக் கவ்வியது ஆளுங்கட்சி
ADDED : நவ 14, 2025 04:58 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பட்கம் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், ஆளுங்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் மக்கள் ஜனநாயக கட்சியின் சையத் முன்டாசிர் மெஹ்தி 4,478 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த 2024ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டசபை தொகுதிக்கு நடந்த தேர்தலில் முதல்வர் உமர் அப்துல்லா புத்கம் மற்றும் கந்தர்பால் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார். பட்கம் தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் சையத் முன்டாசிர் மெஹ்தியை 18,485 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அரசியலமைப்பு விதிப்படி, ஒருவர் ஒரு தொகுதியில் தான் எம்எல்ஏ பதவியில் நீடிக்க முடியும் என்பதால், உமர் அப்துல்லா புத்கம் தொகுதி எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த 14ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் அம்மாநிலத்தை ஆளும் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் சையத் மெக்மூத்தும், மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் சையத் முன்டாசிர் மெஹ்தியும், பாஜ சார்பில் சையத் மோஷின் மோஸ்வியும் களமிறங்கினர். ஆம் ஆத்மி சார்பில் தீபா கான் களமிறக்கப்பட்டார். இத்தேர்தலில் 52.27 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
ஓட்டுகள் இன்று (நவ.,14) எண்ணப்பட்டன. மொத்தம் 17 சுற்றுகளில் முதல் இரண்டு சுற்றுகளில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் முன்னணியில் இருந்தார். ஆனால், மற்ற சுற்றுகளில் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் சையத் முன்டாசிர் மெஹ்தி, முன்னிலை பெற்று, வெற்றி பெற்றார். அவருக்கு 21,578 ஓட்டுகள் கிடைத்தன.
தேசிய மாநாட்டு கட்சியின் சையத் மெஹ்மூத் அல் மோசாவிக்கு 17,098 ஓட்டுகளும்,பாஜவின் சையத் மோஷின் மோஸ்விக்கு 2,619 ஓட்டுகளும் ஆம் ஆத்மியின் தீபா கானுக்கு 459 ஓட்டுகளும் கிடைத்தன.
நக்ரோதா தொகுதி
அதேபோல் நக்ரோதா தொகுதியில் பாஜ எம்எல்ஏ தேவேந்திர சிங் ராணா மறைவு காரணமாக அங்கு இடைத்தேர்தல் நடந்தது. அங்கு அவரின் மகள் தேவயாணி ராணா பாஜ., வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சிகள் களமிறங்கின. இந்த தேர்தலில், தேவயாணி ராணா, 42,350 ஓட்டுகள் பெற், எதிர்க்கட்சி வேட்பாளர்களை 24,647 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

