27.... 19....6... நிதிஷ் அரசியலில் கரைந்து போன காங்கிரஸ்!
27.... 19....6... நிதிஷ் அரசியலில் கரைந்து போன காங்கிரஸ்!
UPDATED : நவ 14, 2025 10:24 PM
ADDED : நவ 14, 2025 04:45 PM

புதுடில்லி: பாரம்பரியமிக்க அரசியல் கட்சியான காங்கிரஸ், பீஹார் அரசியலில் கரைந்தே போயிருக்கிறது. 2015ம் ஆண்டு 27 இடங்களிலும், 2020ல் 19 இடங்களிலும் வென்ற காங்கிரஸ், 2025 தேர்தலில் வெறும் 6 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.
பீஹாரில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மாநில அளவில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் இந்த தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
கருத்துக்கணிப்புகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முந்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், 200 தொகுதிகளை கடந்து இமாலய வெற்றியை பெற்றிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து களம் கண்ட எதிர்க்கட்சிகள் கூட்டணி மண்ணை கவ்வி இருக்கிறது.
அதிலும், எஸ்ஐஆர் விவகாரம், மத்திய அரசுக்கு எதிரான தொடர் முழக்கங்கள் என்று வலம் வந்த ராகுலும், காங்கிரசும் இருந்த இடம் தெரியாத அளவுக்கு சென்று இருக்கிறது. தேர்தல் முடிவுகள் அதைத்தான் கூறுகின்றன.
2015ம் ஆண்டில் 27 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இப்போதைய 2025 தேர்தலில் 6 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. இத்தனைக்கும் அந்த கூட்டணி ஆர்ஜேடி உடன் கூட்டணி அமைத்தது. போட்டியிட்ட இடங்கள் 61. கடும் இழுபறிக்கு பின்னர், இந்த 6 தொகுதிகள் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
2015ல் வென்றது 27 தொகுதிகள்(போட்டியிட்டது 41), 2020ல் வென்றது 19 தொகுதிகள் (போட்டியிட்டது 70) காங்கிரசுக்கு கிடைத்தது. ஆனால் இப்போது போட்டியிட்டது 61 தொகுதிகள். இப்படி கடந்த 10 ஆண்டுகளில் பீஹாரில் காங்கிரஸ் கட்சி கரைந்தே போயிருக்கிறது.
பீஹார் சட்டசபை வரலாற்றில் இல்லாத அளவுக்கு இப்போது காங்கிரஸ் பின்னடைவு என்பதை விட தேய்ந்தே போய்விட்டது எனலாம். எஸ்ஐஆர் எதிர்ப்பு பிரசாரம், மத்திய பாஜ அரசின் மீது மக்கள் அதிருப்தி என்று யாத்திரை, பிரசாரம், தேர்தல் மாநாடு என்று தேஜஸ்வியுடன் ராகுல் தீவிர பிரசாரம் செய்தாலும் வெற்றி என்பது கிட்டவே இல்லை என்பதை விட, வெற்றி எட்டியே பார்க்கவில்லை என்பது தான் களநிலவரம்.
பாஜவின் சுறுசுறு பிரசாரம், நிதிஷின் 19 ஆண்டுகால முதல்வர் முகம், மகளிருக்கு ரூ.10,000 உதவித்தொகை உள்ளிட்ட பல காரணங்கள் ஆளும் கூட்டணியை மக்கள் தேர்வு செய்ய காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இப்படி ஒட்டுமொத்த காங்கிரஸ் வேட்பாளர்களும் பின்னடைவை சந்தித்து இருக்கும் சூழலில் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், தங்களின் அரசியல் பாதையை பீஹாரில் காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமே.

