ADDED : மார் 06, 2025 01:16 AM

துமகூரு: வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கிய சிறுத்தை, காட்டுத் தீயால் ஏற்பட்ட புகையில் மூச்சுத் திணறி உயிரிழந்தது.
கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், திப்டூரின் கிப்பனஹள்ளி பேரூராட்சியின் கிராமப் பகுதிகளில், அவ்வப்போது சிறுத்தைகள் நுழைந்து, கால்நடைகளை தாக்கிக் கொன்று வந்தன.
இதுதொடர்பாக வனத்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள், சிறுத்தை நடமாட்டம் அதிகமுள்ள பகுதியை அடையாளம் கண்டனர்.
இதையடுத்து, மதேஹள்ளி கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா என்பவருக்கு சொந்தமான நிலத்தின் அருகே, வனப்பகுதியில் கூண்டு அமைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு இந்த வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் மளமளவென பரவி, சிறிது நேரத்துக்குப் பின் அணைந்தது.
நிலத்தின் உரிமையாளர் நாராயணப்பா அங்கு வந்து பார்த்தபோது, கூண்டுக்குள் 3 - 5 வயதுக்கு உட்பட்ட ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த அதிகாரிகள், சிறுத்தையை பரிசோதித்தனர்.
காட்டுதீயால் எழுந்த புகை காரணமாக, சிறுத்தை மூச்சுத் திணறி உயிரிழந்திருக்கலாம் என, அவர்கள் தெரிவித்தனர்.
கூண்டுக்குள் சிக்கியது தெரிந்திருந்தால், சிறுத்தையை காப்பாற்றியிருக்கலாம் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர். கே.பி., கிராஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.