அக்னிவீர் திட்டத்தை குப்பை தொட்டியில் வீசுவோம்: ராகுல்
அக்னிவீர் திட்டத்தை குப்பை தொட்டியில் வீசுவோம்: ராகுல்
ADDED : மே 23, 2024 01:24 AM

மஹேந்திரகர், “இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ராணுவ வீரர்களை சாதாரண தொழிலாளியாக மாற்றும் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்படும்,” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் உள்ள 10 லோக்சபா தொகுதிகளுக்கு நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., தனித்து போட்டியிடும் சூழலில், இண்டியா கூட்டணியில் ஒன்பது தொகுதிகளில் காங்கிரசும், ஒரு தொகுதியில் ஆம் ஆத்மியும் போட்டியிடுகின்றன.
இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். மஹேந்திரகர் - பிவானியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அதேபோல், அக்னிவீர் திட்டம் என்பது ராணுவத்தின் திட்டமே அல்ல. அது, மோடியின் திட்டம். இந்த திட்டத்தை ராணுவமே விரும்பவில்லை. இந்த திட்டத்தை பிரதமர் அலுவலகமே வடிவமைத்தது. அக்னிவீர் திட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதில் சேர்பவர்களுக்கு தியாகி அந்தஸ்தோ, ஓய்வூதியமோ, கேன்டீன் வசதியோ எதுவும் கிடையாது.
இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்படும். அதேபோல், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தொழிலதிபர்கள் அதானி - அம்பானி காங்கிரசுக்கு பணம் தந்ததாக மோடி கூறுகிறார். அவ்வாறு தந்திருந்தால், அது குறித்த விசாரணையை ஏன் அவர் துவக்கவில்லை?
இட ஒதுக்கீட்டை ரத்து செய்து இந்திய அரசியலமைப்பை முடித்துவிடுவோம் என பா.ஜ., கூறுகிறது. உலகின் எந்த சக்தியாலும் இந்திய அரசியல் சாசனத்தை அழிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

