UPDATED : செப் 02, 2024 11:35 PM
ADDED : செப் 02, 2024 11:31 PM

புதுடில்லி : தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், விசாரணை நீதிமன்றம் நடத்தும் விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்' என, நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர். மேலும், செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்குகளின் விசாரணைக்கு ஒப்புதல் அளிக்க, கவர்னர் ஏழு மாதங்களுக்கும் மேல் தாமதம் செய்தது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கடந்த 2011 - 16 அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி, 48. போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, அவர் மீது மூன்று குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்திருந்தனர்.
குற்ற பத்திரிகை
இதன் அடிப்படையில் பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைது செய்தது. அவர் மீது, 3,000 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த ஆண்டு ஆக., 12ல் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள், தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, போக்குவரத்து துறையில் வேலை பெறுவதற்காக பணத்தை கொடுத்து ஏமாந்த ஆரணியைச் சேர்ந்த ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேண்டுமென்றே விசாரணையை துவங்காமல் தாமதம் செய்கின்றனர்.
'இந்த தாமதத்துக்கான காரணங்களை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க வேண்டும். ஓராண்டுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க உத்தரவிட வேண்டும். மேலும், அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.
இந்த மனு, கடந்த மாதம் 23ல் விசாரணைக்கு வந்தபோது, 'செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அது தொடர்பான கோப்பு கவர்னரிடம் நிலுவையில் உள்ளது. அவர் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே விசாரணையை துவங்க முடியும்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி, தமிழக அரசு, கவர்னருக்கு அனுப்பி வைத்த ஆவணங்களின் நகல் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதாக இருந்தால், அவரது பெயரையும் குறிப்பிட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரமாண பத்திரம்
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் மாநில அரசு தரப்பில் தாமதம் இல்லை. செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய, ஆக., 23ம் தேதி இரவு தான் கவர்னர் ரவி அனுமதி அளித்தார்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை கேட்ட நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி பிறப்பித்த உத்தரவு:
வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது, ஏழு மாதங்களுக்கும் மேலாக முடிவெடுக்காமல் கவர்னர் தாமதம் செய்தது ஏன்?
அறிக்கைகள்
அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகள் அனைத்துமே சிக்கல் நிறைந்ததாக உள்ளன. மனுதாரர் கோரியபடி சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.
விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும். விசாரணையின் போக்கை அறிய, அவ்வப்போது அறிக்கைகள் பெற்று ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

