மருத்துவ படிப்பில் தோல்வி அடைந்தேன் கோட்டா கலெக்டர் மாணவர்களுக்கு கடிதம்
மருத்துவ படிப்பில் தோல்வி அடைந்தேன் கோட்டா கலெக்டர் மாணவர்களுக்கு கடிதம்
ADDED : மே 02, 2024 12:57 AM

கோட்டா:“தேர்வில் வெற்றி பெறும் மதிப்பெண்களுடன் குழந்தைகளை ஒப்பிடாமல், அவர்களின் தவறுகளை திருத்த பெற்றோர் முயற்சிக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியடைவதற்கு மற்றொரு வாய்ப்பு,”என, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்ட கலெக்டர் டாக்டர் ரவீந்தர் கோஸ்வாமி கூறியுள்ளார்.
தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஏராளமான பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன. இந்த மையங்களில் நீட், ஜே.இ.இ., உட்பட அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்குள்ள விடுதிகளில் தங்கி ஏராளமான மாணவ - மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
சமீபகாலமாக இங்குள்ள மையங்களில் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் இரண்டு பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், இங்குள்ள பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவ - மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு, கோட்டா மாவட்ட கலெக்டர் டாக்டர் ரவீந்தர் கோஸ்வாமி தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதம்:
தோல்வி என்பது வெற்றி அடைய மற்றொரு வாய்ப்பு. குழந்தைகளின் மகிழ்ச்சியை தேர்வில் பெறும் மதிப்பெண்களுடன் ஒப்பிடாமல் அவர்களுடைய தவறுகளை மேம்படுத்த பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும்.
உதாரணம்
பள்ளி, கல்லூரிகளில் தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு கட்டம் மட்டுமே. அதுவே நம் மொத்த வாழ்க்கையையும் நிர்ணயிக்காது. அது இறுதி இலக்கு அல்ல. இதற்கு நானே உதாரணம். மருத்துவப் படிப்பில் நானும் தோல்வி அடைந்துள்ளேன். மீண்டும் படித்து டாக்டர் ஆனேன். அதன்பின்னர்தான், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆனேன்.
கடினமாக உழைப்பது நம் கடமை. அதற்கு பலன் தருவது கடவுள் தான். எனவே, அவர் நம்மை நம்மைத் தோல்வியடையச் செய்தால், நமக்காக வேறொரு பாதையை வகுத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
நடக்கும் போது விழ நேரிடும். ஆனால் விழுந்த பிறகு எழுந்து இலக்கை நோக்கி முன்னேறும்போதுதான் அது அர்த்தமுள்ளதாக மாறும். குழந்தைகள் விலை மதிப்பற்றவர்கள். எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

