ADDED : செப் 12, 2024 01:04 AM
லக்னோ, மதமாற்ற வழக்கில் இஸ்லாமிய மதபோதகர் கலீம் சித்திக் உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தர பிரதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ல், உத்தர பிரதேசத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் நிதியுதவியுடன் செயல்பட்ட அமைப்பு ஒன்று, செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்கள் உள்ளிட்ட ஏழை மக்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான விசாரணையில், டில்லியில் ஜாமியா நகர் பகுதியில் 'இஸ்லாமிக் தாவா' என்ற அமைப்பை நடத்தி வந்த முஹமது உமர் கவுதம், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சிலரின் உதவியுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
திருமணம் செய்தும், வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியும் 1,000க்கும் மேற்பட்டோரை இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர், நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில் விசாரணை நடத்தி 16 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை உத்தர பிரதேச என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், முக்கிய குற்றவாளிகளான இஸ்லாமிய மதபோதகர் கலீம் சித்திக், மதமாற்றம் செய்த உமர் கவுதம் உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
முஹமது சாலிம், ராகுல் போலா, மன்னு யாதவ், குணால் அசோக் சவுத்ரி ஆகிய நான்கு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

