பதிவு செய்யாத விடுதிகளுக்கு பூட்டு: கர்நாடக சுற்றுலா துறை அதிரடி முடிவு
பதிவு செய்யாத விடுதிகளுக்கு பூட்டு: கர்நாடக சுற்றுலா துறை அதிரடி முடிவு
ADDED : ஆக 19, 2024 10:57 PM
பெங்களூரு:
கர்நாடகாவில் முறைப்படி பதிவு செய்யப்படாத ஹோட்டல்கள், ஹோம் ஸ்டேக்களுக்கு பூட்டு போட சுற்றுலாத்துறை முடிவு செய்து உள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு ஆணைய இயக்குனர் ராஜேந்திரா கூறியதாவது:
சுற்றுலாத் துறையில் இதுவரை, 3,000 ஹோம் ஸ்டேக்கள், ஹோட்டல்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் 2,000 ஹோட்டல், சொகுசு விடுதிகள், ஹோம் ஸ்டேக்கள் இன்னும் பதிவு செயயப்படவில்லை.
இது தொடர்பாக, சமீபத்தில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். முறைப்படி பதிவு செய்யாத அனைத்து ஹோட்டல், ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை, சுற்றுலாத்துறை விதிமுறையில் சேர்க்கவும் தீர்மானித்து உள்ளனர்.
இவற்றுக்கு பூட்டு போட கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிகள், போலீசார், வனத்துறை உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்படும். சில இடங்களில் சட்டவிரோதமான செயல்கள் நடப்பதாக, புகார் வந்துள்ளது.
இத்தகைய ஹோம் ஸ்டேக்கள், ஹோட்டல், சொகுசு விடுதிகளுக்கும் பூட்டு போடப்படும்.
சிக்கமகளூரு, ஹாசன், மடிகேரி, தான்டேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஹோம் ஸ்டேக்கள், விருந்தினர் இல்லங்கள், சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளது, எங்களின் கவனத்துக்கு வந்துள்ளன. சுற்றுலா தலங்கள், புண்ணிய தலங்களிலும் ஹோட்டல், லாட்ஜ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
அறைகளை முன் பதிவு செய்வதற்கு முன், சுற்றுலா பயணியர், பொது மக்கள் அந்த ஹோட்டல், ஹோம் ஸ்டேக்கள், ஹோம் ஸ்டேக்கள் சுற்றுலா துறையில் பதிவு செய்யப்பட்டதா, இல்லையா என்பதை சுற்றுலாத்துறை இணைய தளத்தில் பரிசீலிக்க வேண்டும். ஒருவேளை பதிவு செய்யாதது தெரிய வந்தால், சுற்றுலாத் துறைக்கோ அல்லது போலீசாருக்கோ புகார் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

