ADDED : ஜன 17, 2025 11:47 PM
சித்துார்: திருப்பதியில் இருந்து தமிழகம் நோக்கி வந்த தனியார் பஸ் மீது லாரி மோதியதில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த 40 பேர் தனியார் பஸ் வாயிலாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றனர்.
அங்கு வழிபட்ட பின், அன்றிரவே திருப்பதியில் இருந்து அதே பஸ்சில் திருச்சி நோக்கி அவர்கள் புறப்பட்டனர்.
இந்த பஸ், சித்துார் - வேலுார் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் சென்றபோது, ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் கங்கசாகரம் அருகே வந்தது. அப்போது, எதிர் திசையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்புகள் மீது மோதி அவ்வழியாக வந்த பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த பஸ் கவிழ்ந்தது.
தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழு உதவியுடன் பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், திருச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
லாரி டிரைவரும், அதில் இருந்த மற்றொரு நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.