ADDED : அக் 16, 2025 09:54 PM

சென்னை: ''தொழில்நுட்பத்துக்கான கட்டுப்பாடுகள் நமது நாட்டிடம் இல்லாததால், சுயசார்பு செயலி தேவையாக உள்ளது,'' என ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
H1B விசாவுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகள் விதித்தது குறித்தும், சுதேசி செயலியாக அரட்டை உருவாக்கியது குறித்தும் ஸ்ரீதர் வேம்பு கூறியதாவது: இன்னொரு நாட்டில் விசா கொடுத்தே ஆக வேண்டும் என கேட்க முடியாது. அவர்கள் நாடு. அவர்களின் கோட்பாடு. அழையா விருந்தாளியாக ஏன் இருக்க வேண்டும். வேண்டாம் என்றால் வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.
நமது தேசத்துக்கு ஒரு சுயசார்பு பொருளாதாரம் வேண்டும். தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டு சுவிட்ச் நம் நாட்டில் கிடையாது. திடீரென ஒரு சூழ்நிலையில் இதனை நிறுத்திவிடுவேன் என சொல்லலாம். இது நடந்து உள்ளது. நடக்காமல் இல்லை. நமது நாட்டுக்கு ஒரு செயலி வேண்டும். அது தேவை. அப்படித்தான் அரட்டை செயலியை உருவாக்கி உள்ளோம். இன்று நிறைய பேர் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்துள்ளனர். பல ஆண்டுகளாக சுயசார்பு தேவை என உழைத்ததால் இந்த தொழில்நுட்பம் உள்ளது. இன்னும் பல தொழில்நுட்பத்தில் பணியாற்றி கொண்டு இருக்கிறோம்.
செயற்கை நுண்ணறிவு இப்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் பெரிய வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வேலைவாய்ப்பு போகும் என எதிர்மறையாக பார்க்க மாட்டேன். என்ன மாதிரியான புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்த்து தயார்படுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.