ADDED : அக் 16, 2025 10:14 PM

சண்டிகர்: பஞ்சாபில் வழக்கு ஒன்றை தீர்த்து வைப்பதற்காக 5 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.
2007 ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரண் புல்லார். இவர் ரோபர் சரக டிஐஜி ஆக கடந்த 2024ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் ஊழல் கண்காணிப்பு, மொகாலி, சங்குரு மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் பதேகார்க் நகரில் உள்ள பழைய பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம் புகார் தொடர்பான வழக்கிற்காக ஹர்சரண் புல்லார் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதனை கொடுக்க விரும்பாத அவர், சிபிஐயிடம் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து டிஐஜியை சிபிஐ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இன்று அவர் குற்றம்சாட்டப்பட்டவரிடம் ரூ.5 லட்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். தொடர்ந்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.