தேர்தலில் தரம் குறைந்த பேச்சு சிவகுமாருக்கு ஐகோர்ட் 'குட்டு'
தேர்தலில் தரம் குறைந்த பேச்சு சிவகுமாருக்கு ஐகோர்ட் 'குட்டு'
ADDED : ஏப் 25, 2024 11:25 PM

பெங்களூரு: வாக்காளர்களை மிரட்டிய வழக்கில், துணை முதல்வர் சிவகுமாரிடம் விசாரிக்க, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார். இவரது தம்பி சுரேஷ். பெங்களூரு ரூரல் காங்கிரஸ் வேட்பாளராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுரேஷை ஆதரித்து ஆர்.ஆர்.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சிவகுமார் பிரசாரம் செய்தார். சுரேஷுக்கு ஓட்டு போடா விட்டால், காவிரி தண்ணீர் வழங்கப்படாது என கூறினார். வாக்காளர்களை மிரட்டுவதாக தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரில், சிவகுமார் மீது ஆர்.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவகுமார் தரப்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் கூறுகையில், ''மனுதாரர் துணை முதல்வராக உள்ளார். பேசும்போது கவனமுடன் பேச வேண்டியது அவசியம். தேர்தல் பிரசார பேச்சுக்களில் தரம் குறைந்து வருகிறது. அடுத்த விசாரணை நடக்கும் வரை மனுதாரரிடம் விசாரிக்க, இடைக்கால தடை விதிக்கப்படுகிறது,'' என்றார்.
இதன் மூலம், சிவகுமார் சற்று நிம்மதி அடைந்து உள்ளார்.

