ரூ.8 கோடி நகை கொள்ளை முக்கியக் குற்றவாளி 2 ஆண்டுக்குப் பின் கைது
ரூ.8 கோடி நகை கொள்ளை முக்கியக் குற்றவாளி 2 ஆண்டுக்குப் பின் கைது
ADDED : செப் 14, 2024 08:44 PM
புதுடில்லி:இரண்டு ஆண்டுகளுக்கு முன், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த வழக்கில், முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்தவர் சோம்வீர். ஜெய்மாதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவன ஊழியர். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி, சோம்வீரும் அவரது சக ஊழியர் ஜெகதீஷ் சைனியும் டில்லியில் தங்கம் மற்றும் வைர ஆபரணங்களை நகைக்கடைகளில் டெலிவரி செய்தனர்.
பஹர்கஞ்ச் தேசபந்து குப்தா சாலையில் சென்று கொண்டிருந்தபோது சிலர் வழிமறித்தனர். இருவர் மீதும் மிளகாய் பொடியைத் தூவி, சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். அவர்கள் வைத்திருந்த தங்க நகைப் பெட்டியைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்து 6.27 கிலோ தங்கம், 106 வைரங்கள் மற்றும் 2.9 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்தக் கும்பலின் தலைவனும் முக்கியக் குற்றவாளியுமான அஜித் சிங்,46, தலைமறைவாக இருந்தார்.
டில்லி மாநகரப் போலீசுக்கு கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில், இன்ஸ்பெக்டர்கள் பங்கஜ் மாலிக் மற்றும் ரோஹித் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று முன் தினம், பாலம் மகாவீர் என்கிளேவில் பதுங்கி இருந்த அஜித் சிங்கை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.