சலுகையும், அவகாசமும் அளித்தும் கூட்டுறவு கடன் வசூலாகவில்லை ரூ.250 கோடி மட்டும் கிடைத்தது
சலுகையும், அவகாசமும் அளித்தும் கூட்டுறவு கடன் வசூலாகவில்லை ரூ.250 கோடி மட்டும் கிடைத்தது
ADDED : செப் 30, 2025 07:12 AM

சென்னை : கூட்டுறவு வங்கிகளில் நீண்டகால நிலுவை கடன் வசூலிக்கும் திட்டத்திற்கு, இம்மாதம் வரை அவகாசத்தை நீட்டித்தும், 920 கோடி ரூபாய் வசூலாக வேண்டியதில், 250 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகிஉள்ளது.
தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன், நகை கடன் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பண்ணை சாரா பிரிவில், பல ஆண்டுகளுக்கு முன் கடன் வாங்கிய சிலர், அசல், வட்டியை செலுத்தாமல் உள்ளனர்.
அவர்கள், கடன் வாங்க வழங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கிகளில் உள்ளன. வட்டி, அபராத வட்டி, தாமத கட்டணம் போன்றவற்றுடன் சேர்த்து, அசலை அடைக்க மொத்தம், 16 சதவீதம் வட்டி செலுத்த வேண்டியிருந்தது.
எனவே, நீண்ட கால நிலுவை கடனை வசூலிக்க, சிறப்பு கடன் தீர்வு திட்டத்தை, 2023ல் கூட்டுறவு துறை துவக்கியது.
இத்திட்டத்தின் கீழ், அபராத வட்டி உள்ளிட்டவை தள்ளுபடி செய்யப்பட்டு, அசலுடன், 9 சதவீத வட்டி மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம், 2.10 லட்சம் பேரிடம் இருந்து, 910 கோடி ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும்.
இதற்கான அவகாசம் இந்தாண்டு மார்ச்சில் முடிவடைந்தது. பின், வாடிக்கையாளர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, அவகாசம் செப்., 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிவடைந்த நிலையில், இதுவரை, 70,000 பேரிடம் இருந்து, 250 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே வசூலாகியுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அவகாசம் அளித்தும் எதிர்பார்த்தபடி, நிலுவை கடன் தொகை வசூலாகவில்லை. இனி, அவகாசம் நீட்டிக்க அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை' என்றார்.