மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக மம்தா அறிவிப்பு
மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக மம்தா அறிவிப்பு
ADDED : ஜூன் 09, 2024 12:25 AM
கோல்கட்டா: 'மோடி, மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ள விழாவை புறக்கணிக்கப் போவதாக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 42 லோக்சபா தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இதில், பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டதில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் 29 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ., 12 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றின.
இதையடுத்து, வெற்றி பெற்ற திரிணமுல் எம்.பி.,க்கள், அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றனர். அப்போது மம்தா பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வுக்கு எதிராக திரிணமுல் காங்கிரஸ் பெரிய வெற்றி பெற்று உள்ளது. மத்தியில் அமையும் தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு நான் வாழ்த்து கூற விரும்பவில்லை.
மத்தியில் ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆட்சி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், பதவியேற்பு நிகழ்ச்சியில் திரிணமுல் காங்கிரஸ் பங்கேற்காது.
மொத்தம் 400 இடங்களில் வெல்வோம் என்றவர்களால் தனிப்பெரும்பான்மை கூட பெற முடியவில்லை.
இண்டியா கூட்டணி இப்போது ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை என்பதால், அது நடக்காது என்று இல்லை.
சில அரசுகள் ஓரிரு நாட்கள் மட்டுமே பதவியில் இருந்த வரலாறு உண்டு. இந்த அரசு 15 நாட்கள் நீடிக்குமா, இல்லை அதற்குள் கவிழுமா என்பது யாருக்குத் தெரியும்? நேரம் வரும்போது இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.