நில தகராறில் புதைக்கப்பட்ட நபர் : நாய்களால் உயிர் பிழைத்த அதிசயம்
நில தகராறில் புதைக்கப்பட்ட நபர் : நாய்களால் உயிர் பிழைத்த அதிசயம்
ADDED : ஆக 03, 2024 12:56 AM
ஆக்ரா, :உத்தர பிரதேசத்தில், நிலத் தகராறில் உயிரிழந்து விட்டதாகக் கருதி புதைக்கப்பட்ட நபர், தெரு நாய்களால் உயிர் பிழைத்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.
உ.பி.,யின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஆர்டோனி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரூப் கிஷோர், 24. நிலப் பிரச்னை தொடர்பாக, கடந்த ஜூலை 18ல், அங்கித், கவுரவ், கரண், ஆகாஷ் -ஆகியோர், ரூப் கிஷோரை சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்து விட்டதாக நால்வரும் நினைத்தனர். இதையடுத்து, ஆக்ராவில் தங்களுக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்தில், ரூப் கிஷோரை, நான்கு பேரும் புதைத்தனர்.
சிறிது நேரத்துக்கு பின், புதைக்கப்பட்ட இடத்தில் தெரு நாய்கள் தோண்டின. அப்போது, ரூப் கிஷோரின் சதையை, நாய்கள் கடித்ததில் அவருக்கு சுயநினைவு வந்தது. இதன்பின், அவர் அங்கிருந்து வெளியேறினார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, போலீசில், ரூப் கிஷோர் புகார் அளித்தார். இதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கித், கவுரவ், கரண், ஆகாஷ் -ஆகியோரை தேடி வருகின்றனர்.