ADDED : ஜூன் 15, 2024 04:13 AM

பெங்களூரு: குவைத் தீ விபத்தில், கலபுரகியை சேர்ந்த கார் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்காசிய நாடான குவைத்தின் மங்காப் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், இரண்டு நாட்களுக்கு முன்தினம் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், இறந்த 49 பேரில், 45 பேர் இந்தியர்கள். இதில், விஜய்குமார் பிரசன்னா, 40, என்பவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது.
கலபுரகி மாவட்டம், ஆலந்தா தாலுகா, சரசம்பா கிராமத்தை சேர்ந்த அவர், 10 ஆண்டுகளாக குவைத்தில் தங்கி கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
வழக்கம் போல் பணி முடித்து விட்டு, அறையில் துாங்கி கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில், உடல் கருகி உயிரிழந்தார். இவரும், ஆலந்தை சேர்ந்த மேலும் இருவரும், விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் தங்கி இருந்தனர்,
தீப்பற்றி எரிந்ததும், மற்ற இருவர் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர். விஜய்குமார் பிரசன்னா உயிரிழந்தார். இந்த தகவலை, உயிர் தப்பியவர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்துஉள்ளனர்.
இறந்தவருக்கு, மனைவி, மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

