ADDED : ஜூன் 04, 2024 04:38 AM

கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா என்றால், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கடற்கரையும், கடல்சார்ந்த விளையாட்டுகளும் தான். ஆனால் அவற்றையும் தாண்டி, கடலோரப் பகுதிகளில் பார்க்க வேண்டிய நிறைய கோவில்கள் உள்ளன. இவற்றில் மங்களூரு நகரில் உள்ள மங்களாதேவி கோவிலும் ஒன்று.
மங்களூரு டவுன் போலாரில் மங்களாதேவி கோவில் உள்ளது. இந்த கோவில், சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான, பரசுராமரால் இக்கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
அதன்பின்னர் கோவில் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்து உள்ளது. 9ம் நுாற்றாண்டில் அலுபா வம்சத்தின் மன்னர் குந்தவர்மாவால், மங்களாதேவி கோவில் புதுப்பிக்கப்பட்டது.
கேரள பாணியில் கட்டப்பட்டு இருக்கும், கோவிலின் கட்டட கலை பார்ப்பதற்கு, பிரமிப்பாக இருக்கும். மூலஸ்தானத்தில் கம்பீரமாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு மங்களாதேவி அம்மன் அருள்பாலிக்கிறார்.
மூலஸ்தான கதவுகளின் இருபுறமும் துவாரபாலகர்கள் எனப்படும், காவல் தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. நவராத்திரியை ஒட்டி 9 நாட்கள் நடக்கும் பூஜை இங்கு பிரசித்தி பெற்றது. ஏழாவது நாளில் மங்களாதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தசரா நிறைவு நாளில், ரத உற்சவமும் நடக்கிறது.
பரசுராமரால் கட்டப்பட்டது என்பதால், இக்கோவிலில் அனைத்து நாட்களிலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கேரளாவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கோவிலின் நடை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும்.
பெங்களூரில் இருந்து மங்களூரு 350 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. இரு நகரங்களையும் இணைக்கும் வகையில், பஸ், ரயில், விமான வசதியும் உள்ளது.
- நமது நிருபர் -