கவர்னர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி; வெறும் தபால்காரர் அல்ல: மத்திய அரசு வாதம்!
கவர்னர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி; வெறும் தபால்காரர் அல்ல: மத்திய அரசு வாதம்!
ADDED : ஆக 20, 2025 05:31 PM

புதுடில்லி: ''கவர்னர் என்பவர் வெறும் தபால்காரர் அல்ல. அவர் மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்,'' என்று, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்தது தொடர்பான வழக்கில், மத்திய அரசு வக்கீல் வாதிட்டார்.
சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க, ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கு 2வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி பிஆர் கவாய், நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
அப்போது, 'அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் கவர்னர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தால், அந்த மசோதா தோல்வியடைந்ததாக அர்த்தம். மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னருக்கு 4 வாய்ப்புகள் உள்ளன.
மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தல், ஒப்புதலை நிறுத்தி வைத்தல், மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்புதல் அல்லது சட்டசபைக்கு திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட விருப்பங்கள் உள்ளன.
கவர்னர் ஒப்புதலைத் தடுத்து நிறுத்தும்போது, மசோதா நிறைவேறாது. கவர்னர் வெறும் தபால்காரர் அல்ல. அவர் மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்,' என்று மத்திய அரசு தரப்பு வக்கீல் துஷார் மேத்தா வாதிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், 'சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு நிரந்தரமாக ஒப்புதல் அளிக்காமல் இருக்க கவர்னருக்கு அதிகாரம் இருந்தால், ஒரு தேர்வு செய்யப்பட்ட ஒரு மாநில அரசை கவர்னரின் தன்னிச்சையான விருப்பு, வெறுப்புகளுக்கு ஆளாக்கும். இது கவர்னர் மற்றும் சட்டசபை அதிகாரங்களுக்கு எதிரானது,' என்று கூறினர்.
தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை நாளை (ஆக.,21) ஒத்திவைக்கப்பட்டது.