ADDED : மே 10, 2024 10:53 PM

மல்லேஸ்வரம் : வரி பாக்கி வைத்துள்ள மந்திரி மாலுக்கு, பெங்களூரு மாநகராட்சி மீண்டும் பூட்டு போட்டுள்ளது.
பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் உள்ள மந்த்ரி மால் பிரபலமானது. தினமும் பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் அதிக எண்ணிக்கையில் வருவர்.
பல ஆண்டுகளாக மந்த்ரி மால், கோடிக்கணக்கான ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது. வரி செலுத்துவதில் உரிமையாளர் அலட்சியம் காண்பித்ததால், பெங்களூரு மாநகராட்சி பல முறை நோட்டீஸ் அனுப்பியது. பதிலளிக்காததால் எட்டு முறை மாலுக்கு பூட்டு போட்டது.
ஒவ்வொரு முறை பூட்டு போடும்போது, மால் உரிமையாளர் நீதிமன்றத்தை நாடுவார். மாலின் பூட்டை திறக்க வைத்து தொழிலை நடத்துவார். மாநகராட்சிக்கு சிறிதளவு தொகையை கட்டிவிட்டு, அவகாசம் பெறுவார். ஆனாலும், முழு வரி பாக்கியையும் செலுத்தவில்லை. 32 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளதாக, சமீபத்தில் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. உரிமையாளர் பதில் அளிக்கவில்லை.
எனவே, நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள், மந்த்ரி மாலுக்கு வந்து மீண்டும் பூட்டு போட்டனர். மாலின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதாக, நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், மால் பூட்டப்பட்டதை பார்த்து, ஏமாற்றத்துடன் சென்றனர்.