ஒலிம்பிக் நிறைவு விழாவில் தேசியக்கொடி ஏந்துகிறார் மனு பாகர்; பதக்க மங்கைக்கு கவுரவம்!
ஒலிம்பிக் நிறைவு விழாவில் தேசியக்கொடி ஏந்துகிறார் மனு பாகர்; பதக்க மங்கைக்கு கவுரவம்!
ADDED : ஆக 04, 2024 06:35 AM

பாரிஸ்: இந்தியாவின் பதக்க மங்கை மனு பாகர், ஒலிம்பிக் தொடர் நிறைவு விழாவில் மூவர்ணக்கொடியை ஏந்தி செல்கிறார்.
2 பதக்கங்கள்
பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. பல்வேறு நாடுகளின் வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளி குவிக்க, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாரிஸ் சென்ற இந்திய ஒலிம்பிக் குழுவில் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர் 2 பதக்கங்களை வென்று அசத்தினார்.
ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்றவர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்து நாட்டுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.
மூவர்ணக்கொடி
இந் நிலையில், ஒலிம்பிக் தொடரின் நிறைவு விழா வரும் 11ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. அந்த விழாவில் இந்திய நாட்டின் தரப்பில் பதக்க மங்கை மனு பாகர் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விரைவில் ஒப்புதல்
இந்திய ஒலிம்பிக் சங்கம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. வெகு விரைவில் உரிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.