பி.எஸ்.பி., வேட்பாளருக்கு மிரட்டல் மாரசந்திரா முனியப்பா குற்றச்சாட்டு
பி.எஸ்.பி., வேட்பாளருக்கு மிரட்டல் மாரசந்திரா முனியப்பா குற்றச்சாட்டு
ADDED : ஏப் 12, 2024 05:40 AM
ராம்நகர்: பெங்களூரு ரூரல் தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவரை காங்கிரசார் மிரட்டி, மனுவை திரும்ப பெற வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள் மட்டுமின்றி, பி.எஸ்.பி.,யும் சில தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. பெங்களூரு ரூரல் தொகுதியில், இந்த கட்சி சார்பில் சின்னப்பா சிக்கஹாகடே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இதே தொகுதியில் துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ், காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ளார்.
இந்நிலையில் பி.எஸ்.பி., வேட்பாளரான சின்னப்பா சிக்கஹாகடே, தன் வேட்புமனுவை திரும்ப பெற்று கொண்டார். சிவகுமாரும், சுரேஷும் மிரட்டி வேட்புமனுவை திரும்ப பெற வைத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பி.எஸ்.பி., மாநில தலைவர் மாரசந்திரா முனியப்பா கூறியதாவது:
சிவகுமார் சகோதரர்களின் மிரட்டல், அடக்குமுறைக்கு பயந்து, பெங்களூரு ரூரல் தொகுதியின் பி.எஸ்.பி., வேட்பாளர் சின்னப்பா சிக்கஹாகடே, வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொண்டார்.
இம்முறை லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரல் தொகுதி 'ஹை வோல்டேஜ்' தொகுதியாக, அடையாளம் காணப்படுகிறது. இங்கு வெற்றி பெற வேண்டும் என, காங்., வேட்பாளர் சுரேஷ் பிடிவாதத்தில் உள்ளார்.
குறுக்கு வழியில் மற்ற கட்சிகள் வேட்பாளர்களின் வேட்புமனுவை திரும்ப பெற வைக்கிறார். மைசூரில் முதல்வர் சித்தராமையாவின் சதியால், எங்கள் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

