குடிநீர் குழாயில் 'ஏரியேட்டர்' பொருத்த மே 7 கடைசி நாள்
குடிநீர் குழாயில் 'ஏரியேட்டர்' பொருத்த மே 7 கடைசி நாள்
ADDED : மே 03, 2024 06:57 AM

பெங்களூரு,: 'தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், குழாய்களில், 'ஏரியேட்டர்' பொருத்துவதற்கு மே 7ம் தேதி கடைசி நாள்' என்று பெங்., குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்துள்ளார்.
பருவமழை சரியாக பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கான போர்வெல்கள் தண்ணீரின்றி வற்றியுள்ளது. இதனால், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சிக்கனத்தின் ஒரு பகுதியாக, தண்ணீரின் அளவை குறைக்கும் வகையில், வணிக வளாகங்கள், மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு கட்டடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், வழிபாட்டு தலங்கள், பொது இடங்களில் உள்ள குழாய்களில் 'ஏரியேட்டர்' பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிலர் கால அவகாசம் கேட்டதால், வரும் 7ம் தேதி வரை கால அவகாசம் நீடித்து, பெங்., குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு நகர் முழுதும், 6,00,000க்கும் அதிகமான குழாய்களுக்கு ஏரியேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, ஏரியேட்டர் பொருத்துவதற்கு மே 7ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரும் பொருத்தவில்லை என்றால், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வரும் 8ம் தேதி முதல், ஆய்வு செய்து, அபராதம் விதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.