டாக்டர் சீட்டின்றி மருந்து: உரிமம் ரத்து என எச்சரிக்கை
டாக்டர் சீட்டின்றி மருந்து: உரிமம் ரத்து என எச்சரிக்கை
ADDED : செப் 01, 2024 11:25 PM
பெங்களூரு: டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல், பொது மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கும் மருந்து கடைகளின் லைசென்சை ரத்து செய்ய, சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் கொரோனா பரவ துவங்கிய பின், மக்களின் மனப்போக்கு மாறியுள்ளது. காய்ச்சல், இருமல், கை, கால் வலி ஏற்பட்டால் டாக்டரிடம் செல்வது இல்லை. மருந்து கடைக்கு சென்று தாங்களாகவே ஆன்டிபயாடிக் மாத்திரைகள் வாங்கி, விழுங்குகின்றனர்.
பலரும் சிறு, சிறு பிரச்னைகளுக்கும் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொள்கின்றனர். டாக்டர்களின் மருந்து சீட்டை கேட்காமல், பொது மக்களுக்கு மாத்திரைகள் விற்கின்றனர். இது சுகாதாரத்துறைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
அளவுக்கு அதிகமான ஆன்டிபயாடிக் மாத்திரைகள், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
இதை தீவிரமாக கருதிய சுகாதாரத்துறை, டாக்டர் சீட்டு இல்லாமல், மாத்திரைகளை விற்கும் மருந்து கடைகளின் லைசென்சை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. மருத்துவ வல்லுனர் சுரேஷ் கூறியதாவது:
ஆன்டிபயாடிக் மாத்திரைகள், கருச்கலைப்பு மாத்திரைகள் உட்பட அபாயமான மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனை இல்லாமல், பொது மக்கள் பயன்படுத்த கூடாது.
மருந்து கடைகளும் கூட டாக்டரின் சீட்டு இல்லாமல் இத்தகைய மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ய கூடாது. இது தொடர்பாக, சுகாதாரத்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில மருந்து கடைகள் விதிமீறலாக மாத்திரைகளை விற்கின்றனர். இந்த மருந்து கடைகள் மீது, நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முன் வந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமாகும்.
இவ்வாறு அவர்கூறினார்.