2 கார்கள் மீது மெஸ்காம் லாரி மோதல் ஒரே குடும்பத்தின் நான்கு பேர் பலி
2 கார்கள் மீது மெஸ்காம் லாரி மோதல் ஒரே குடும்பத்தின் நான்கு பேர் பலி
ADDED : மே 25, 2024 01:41 AM

சிக்கமகளூரு, இரண்டு கார்கள் மீது மெஸ்காம் லாரி மோதியதில், ஒரே குடும்பத்தின் நான்கு பேர் பலியாகினர்; 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகா பனகல் அருகே, தேவரமனே கிராஸ் பகுதியில், நேற்று மாலை இரு கார்கள் சென்று கொண்டு இருந்தன. எதிரே மெஸ்காம் எனும் மங்களூரு மின்சார நிறுவனத்தின் லாரி வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில், இரண்டு கார்கள் மீதும் லாரி மோதியது. இதில் ஒரு கார் உருக்குலைந்து, இன்னொரு காருக்கும் சேதம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கியவர்கள் 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என்று அலறினர்.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பனகல் போலீசாருக்கு தகவல் சென்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கார்களுக்குள் இருந்தவர்களை மீட்கும், பணியில் ஈடுபட்டனர். உருக்குலைந்த காருக்குள் நான்கு பேர் இறந்தது தெரிந்தது. மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடினார்.
இன்னொரு காரில் இருந்த 7 பேரும், படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 12 பேரும் மீட்கப்பட்டு, மங்களூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சித்ரதுர்காவின் ஹொலல்கெரே சன்னப்பட்டணா கிராமத்தின் ஹம்பய்யா, 65, பிரேமா, 58, மஞ்சய்யா, 60, பிரபாகர், 45, இறந்தது தெரிந்தது. படுகாயம் அடைந்தவர்கள் பெயர்கள் தெரியவில்லை. இவர்கள் 16 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
தட்சிண கன்னடா தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில், சாமி தரிசனம் செய்துவிட்டு, ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது, விபத்து நடந்தது தெரிய வந்துள்ளது. மெஸ்காம் லாரி டிரைவரிடம் விசாரணை நடக்கிறது.

