ADDED : ஏப் 16, 2024 12:33 AM

புதுடில்லி, 'நாட்டில் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது.
வாய்ப்பு
இந்த ஆண்டு கோடைக்காலம் துவங்குவதற்கு முன், பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசுகிறது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடப்பு ஆண்டில் ஜூன் முதல் செப்., வரையிலான நான்கு மாத பருவமழை காலத்தில், நாட்டில் வழக்கத்தை விட அதிகமாக மழை பொழிவு இருக்கும்.
இந்த காலகட்டங்களில், 106 சதவீதம் வரை மழை பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளது.
இதன்படி சராசரியாக 87 செ.மீ., மழை பெய்யும் என கணிக்கப்பட்டுஉள்ளது.
தற்போது மிதமான 'எல் நினோ' நிலை நிலவுகிறது. பருவமழை துவங்கும் நேரத்தில் இது நடுநிலையாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன் பின், ஆகஸ்ட் - -செப்டம்பரில் இது மாறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வறட்சி
எல் நினோ நிலை எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதை பொறுத்து தான், அதீத மழை பெய்வதோ அல்லது கடுமையான வறட்சி ஏற்படுவதோ நிர்ணயமாகும்.
பசிபிக் பெருங்கடலில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த வெப்பநிலையால் வகைப்படுத்தப்படும் காலநிலை நிகழ்வு தான் எல் நினோ.

