டில்லி அரசை கலைக்க பா.ஜ., சதி அமைச்சர் அதிஷி சிங் குற்றச்சாட்டு
டில்லி அரசை கலைக்க பா.ஜ., சதி அமைச்சர் அதிஷி சிங் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 13, 2024 01:57 AM

புதுடில்லி:“தலைநகர் டில்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய பா.ஜ., அரசு அரசியல் சதித் திட்டம் தீட்டி வருகிறது,” என, டில்லி அமைச்சர் அதிஷி சிங் கூறினார்.
டில்லி அமைச்சர் அதிஷி சிங் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பதே, டில்லி அரசைக் கவிழ்க்கத்தான். டில்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த, மத்திய பா.ஜ., அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது.
டில்லியில் ஆட்சியை அமல்படுத்துவது சட்டவிரோதமானது மட்டுமின்றி மக்களின் முடிவுக்கு எதிரானது.
சில மாதங்களாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாரும் நியமிக்கப்படவில்லை.
பல முக்கியப் பதவிகள் காலியாக உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், கவர்னர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. ஆனால், இதை ஒரு குற்றச்சாட்டாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் கடிதம் எழுதியுள்ளார்.
டில்லியில் ஆட்சிக்கு வர முடியாது என்பது பா.ஜ.,வுக்கு நன்றாகவே தெரியும். கடந்த 2015 மற்றும் 2020ல் நடந்த டில்லி சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.,வை டில்லி மக்கள் புறக்கணித்து விட்டனர்.
அதனால்தான் டில்லி அரசை கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சி நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
ஆம் ஆத்மி அரசு பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவது சட்டவிரோதமானது. கடந்த பிப்.,17ல் சட்டசபையில் ஆம் ஆத்மி தன் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
டில்லியில் இன்று தேர்தல் நடந்தாலும், அரவிந்த் கெஜ்ரிவால்தான் வெற்றிவாகை சூடுவார்.
கடந்த 2014ல் டில்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தப்பட்டு 2015ல் டில்லி மக்கள் ஆம் ஆத்மியிடம் ஆட்சியைக் கொடுத்தனர்.
மீண்டும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினால், டில்லி மக்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் அதிஷியின் குற்றச்சாட்டு குறித்து டில்லி மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, ''ஆம் ஆத்மி கட்சிக்கு, சட்டசபையில் பெரும்பான்மை இருந்தும், ஜனாதிபதி ஆட்சி குறித்த அச்சம் ஆட்டிப்படைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
''இது, அமைச்சர் அதிஷியின் வழக்கமான பொய். பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்றார்.

