பெலகாவியில் 'இரு குடும்பங்கள் மல்யுத்தம்' ஆதிக்கம் செலுத்த துடிக்கும் அமைச்சர், சகோதரர்கள்
பெலகாவியில் 'இரு குடும்பங்கள் மல்யுத்தம்' ஆதிக்கம் செலுத்த துடிக்கும் அமைச்சர், சகோதரர்கள்
ADDED : ஏப் 27, 2024 11:11 PM

இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில், மிகவும் கவனிக்கப்பட வேண்டிய தொகுதிகளில் ஒன்று பெலகாவி.
கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில், இந்தத் தொகுதி அமைந்துள்ளது. இங்கு மராத்தியர்கள் கணிசமாக வசிப்பதால், பெலகாவியை மஹாராஷ்டிராவும் சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால் பெலகாவியை விட்டுக் கொடுக்க, கர்நாடகா மறுக்கிறது.
பெலகாவியில் சுவர்ண விதான் சவுதா கட்டப்பட்டு, ஆண்டுதோறும் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் அங்கு தான் நடத்தப்படுகிறது.
பெலகாவி பிரச்னையில் மஹாராஷ்டிராவுடன், கர்நாடகா மோதல் போக்கை கடைபிடித்து வந்தாலும், சட்டசபை, லோக்சபா தேர்தலின்போது, மராத்தியர் ஓட்டுகளை, பெலகாவியில் போட்டியிடும் கட்சியினர் நம்பி உள்ளனர்.
கடந்த 1952 முதல் 2019 வரை பெலகாவி லோக்சபா தொகுதிக்கு 19 தேர்தல்கள் நடந்து உள்ளன. காங்கிரஸ் 12 முறையும், பா.ஜ., ஆறு முறையும், ம.ஜ.த., ஒரு முறையும் வென்றுள்ளன. காங்கிரசின் சண்முகப்பா சித்னால், பா.ஜ.,வின் சுரேஷ் அங்கடி அதிகபட்சமாக தலா நான்கு முறை எம்.பி.,யாக இருந்து உள்ளனர். 25 ஆண்டாக பா.ஜ., ஆதிக்கம் தான்.
சிவாஜி சிலை
கடந்த 2004, 2009, 2014, 2019 தேர்தலிலும், 2021 இடைத்தேர்தலிலும் பா.ஜ., வெற்றி பெற்றது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த பெலகாவி, இப்போது பா.ஜ., வசம் உள்ளது. தங்கள் கோட்டையை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று, காங்கிரஸ் கணக்கு போட்டு உள்ளது.
பெலகாவியில் பா.ஜ., சார்பில் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் சார்பில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் மகன் மிருணாள் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையில் இருமுனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எம்.இ.எஸ்., எனும் மஹாராஷ்டிரா ஏகிகிரண் சமிதியும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
மஹாதேவ் பாட்டீல் போட்டியிடுகிறார். இதனால் பெலகாவியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
பெலகாவியில் வேட்பாளர் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் லிங்காயத், மராத்தியர்கள் ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காங்கிரஸ், பா.ஜ., வேட்பாளர்கள் இருவரும் லிங்காயத்துக்கள். மஹாதேவ் பாட்டீல், மராத்தியர். மராத்தியர்கள் ஓட்டுகளை கவரும் வகையில், பெலகாவி ரூரல் ராஜஹன்ஸ்காட் பகுதியில் 36 அடி உயர சிவாஜி சிலை அமைக்க, பெலகாவி அரசியல்வாதிகள் அழுத்தத்ததால் அரசு நிதி ஒதுக்கியது.
பிரிந்த ஓட்டுகள்
கடந்த ஆண்டு மார்ச்சில் அந்த சிலை திறக்கப்பட்டது. ஆனால் அந்த சிலையை வைத்து, பா.ஜ., - காங்கிரசார் அரசியல் செய்தனர். ஆனாலும் சிவாஜி சிலையை வைத்து பிரசாரம் செய்து, கடந்த சட்டசபை தேர்தலில் பெலகாவி வடக்கு, பெலகாவி தெற்கு, பெலகாவி ரூரலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
மராத்தியர்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவானவர்கள் என்று கூறப்பட்டாலும், பெலகாவி வடக்கு, பெலகாவி தெற்கு, பெலகாவி ரூரலில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தனர்.
ஆனால் லோக்சபா தேர்தலில் எம்.இ.எஸ்., வேட்பாளர் போட்டியிடுவதால், மராத்தியர்கள் ஓட்டுகள் பிரியும் வாய்ப்பு உள்ளது. இது பா.ஜ., - காங்கிரஸ் வேட்பாளாகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கடந்த 2021 இடைத்தேர்தலில் எம்.இ.எஸ்., வேட்பாளராக போட்டியிட்ட சுபம் விக்ராந்த் ஷெல்கே 1,17,174 ஓட்டுகள் பெற்று, காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு கிடைக்க இருந்த ஓட்டுகளை பிரித்தார். இதனால் பா.ஜ.,வின் மங்களா அங்கடி வெறும் 5,240 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.
எம்.இ.எஸ்., போட்டியிடுவதால், லிங்காயத் ஓட்டுகளுக்கு காங்கிரஸ், பா.ஜ., வேட்பாளர்கள் குறிவைக்க துவங்கி உள்ளனர்.
ஜார்கிஹோளி
“நான் பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்தவள். என் உடலில் ராணி சென்னம்மா ரத்தம் ஓடுகிறது,” என, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் வசனம் பேசினார். ஆனால், 'அவர் பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்தவர் இல்லை; பனாஜிகா சமூகத்தை சேர்ந்தவர்' என, பா.ஜ.,வினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
பெலகாவி லோக்சபா தொகுதிக்கு உட்பட்டு, அரபாவி, கோகாக், பெலகாவி வடக்கு, பெலகாவி தெற்கு, பெலகாவி ரூரல், பைலஹொங்கல், சவுந்தட்டி எல்லம்மா, ராம்துர்கா என, எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில் அரபாவி, கோகாக், பெலகாவி தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வினர். மற்ற ஐந்து தொகுதிகளில் அமைச்சர் லட்சுமி உட்பட, ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள். மேலும் லட்சுமியின் தம்பி சென்ன ராஜ் கட்டிஹோளி, காங்., - எம்.எல்.சி.,யாக உள்ளார்.
கோகாக், அரபாவி எம்.எல்.ஏ.,க்களான ஜார்கிஹோளி சகோதரர்கள் ரமேஷ், பாலசந்திராவுக்கு, அமைச்சர் லட்சுமியை கண்டால் ஆகாது. இதனால் அவரது மகனை தோற்கடிக்க, அனைத்து முயற்சியும் செய்வர். மும்முனை போட்டி நிலவும் பெலகாவியில், அமைச்சர் லட்சுமி மகனை கரை சேர்ப்பரா என்ற எதிர்ப்பார்ப்பு எகிறி உள்ளது
- நமது நிருபர் -.

