ADDED : ஜூன் 25, 2024 05:15 AM
புதுடில்லி, ஜூன் 25-
ராஜ்யசபா சபை முன்னவராக பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய சுகாதார துறை அமைச்சருமான நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவடைந்து பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. இந்நிலையில், ராஜ்யசபாவில் பா.ஜ.,வின் சபை தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்ற ஆலோசனை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.
இந்த பதவி, ராஜ்யசபா சபை முன்னவர் என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், ராஜ்யசபா சபை முன்னவராக இருந்தார்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று லோக்சபா எம்.பி.,யாகி விட்டார். இதனால், சபை முன்னவர் பகுதிக்கு வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டியிருந்தது.
எதிர்க்கட்சிகளை சமாளித்து, ராஜ்யசபா தலைவருடன் இணைந்து நெருக்கடியான நேரங்களில் சபையை சுமுகமாக நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு சபை முன்னவருக்கு உள்ளது.
இந்நிலையில், இந்த பதவிக்கு நட்டாவை பா.ஜ., மேலிடம் நேற்று நியமித்தது. நட்டாவையும் சேர்த்து, 12 மத்திய அமைச்சர்கள் ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ளனர்.