பதவியை ராஜினாமா செய்ய தயார் அமைச்சர் பரமேஸ்வர் அதிரடி
பதவியை ராஜினாமா செய்ய தயார் அமைச்சர் பரமேஸ்வர் அதிரடி
ADDED : பிப் 23, 2025 11:09 PM

துமகூரு: ''ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் கூறினால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்,'' என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அறிவித்து உள்ளார்.
சித்தராமையாவுக்கு பின்பு, முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், துணை முதல்வர் சிவகுமார் உள்ளார். இதற்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார். இது, சித்தராமையா அணியில் உள்ள மூத்த அமைச்சர்கள் பரமேஸ்வர், ராஜண்ணா, சதீஷ் ஜார்கிஹோளிக்கு பிடிக்கவில்லை. டில்லிக்கு சென்று சிவகுமாருக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அரசு ஊழியர்கள் சங்க மாநாட்டில் பேசிய சிவகுமார், 'எனது உடல் நிலை இன்னும் 8 முதல் 10 ஆண்டுகள் நல்ல நிலையில் இருக்கும்.
அடுத்த தேர்தலையும் எனது தலைமையில் தான் கட்சி சந்திக்கும்' என்று கூறியிருந்தார். இந்த கருத்து பரமேஸ்வர் உள்ளிட்டோருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது சொந்த தொகுதியான, துமகூரு கொரட்டகெரேயில் நேற்று கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில், ''நான் உள்துறை அமைச்சராக இருப்பதால், எனக்கு நிறைய பொறுப்பு உள்ளது. உங்களை என்னால் அடிக்கடி சந்திக்க முடியவில்லை. உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைக்க முடியவில்லை. இதனால் என் மீது உங்களுக்கு கோபம், வருத்தம் இருக்கலாம். ஆனால் நீங்கள் கூறினால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்,'' என்றார்.
அப்போது தொண்டர்கள், ஆதரவாளர்கள், 'நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டாம்' என்றனர். 'எல்லாம் கடவுள் கையில் இருக்கிறது' என்று பரமேஸ்வர் கூறினார்.

