திருப்பரங்குன்றம் மலையில் ஐகோர்ட் கிளை நீதிபதி ஆய்வு
திருப்பரங்குன்றம் மலையில் ஐகோர்ட் கிளை நீதிபதி ஆய்வு
ADDED : நவ 19, 2025 07:26 PM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு வரும் 24ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், ஐகோர்ட் கிளை நீதிபதி சுவாமிநாதன் அங்கு சென்று ஆய்வு செய்தார்.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ' பாரம்பரியமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் தீப தூணில் மட்டுமே ஏற்றப்படும்' என வாதிட்டார்.இதனைத் தொடர்ந்து விசாரணையை நவ.,24ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருந்தார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில், இந்த வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட் கிளை நீதிபதி சுவாமிநாதன் பார்வையிட்டார். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து நீதிபதி ஆய்வு செய்தார்.

