முதல்வர் பதவியை விட்டு தர அறிவுரை மடாதிபதிக்கு அமைச்சர்கள் கண்டனம்
முதல்வர் பதவியை விட்டு தர அறிவுரை மடாதிபதிக்கு அமைச்சர்கள் கண்டனம்
ADDED : ஜூன் 29, 2024 04:37 AM

பெங்களூரு: முதல்வர் பதவியை விட்டுத் தரும்படி கூறிய, விஸ்வ ஒக்கலிகர் மஹா சமஸ்தான மடாதிபதி சந்திரசேகர சுவாமிகள் மீது, சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
பெங்களூரின் கன்டீரவா ஸ்டேடியத்தில், நேற்று முன்தினம் கெம்பேகவுடா ஜெயந்தி நடந்தது.
இதில் பங்கேற்ற விஸ்வ ஒக்கலிக மஹா சமஸ்தான மடத்தின் சந்திரசேகர சுவாமிகள், மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் சித்தராமையாவிடம், 'நீங்கள் முதல்வராக இருந்து, அனுபவம் பெற்றுள்ளீர்கள். இனி சிவகுமாருக்கு பதவியை விட்டுத் தாருங்கள். முதல்வராகும் தகுதி அவருக்கு உள்ளது. அவரும் பதவிக்கு வரட்டும்' என அறிவுறுத்தினார்.
சுவாமிகள் நேரடியாக கூறியதால், முதல்வர் சித்தராமையா தர்மசங்கடத்தில் நெளிந்தார். சந்திரசேகர சுவாமிகளுக்கு, அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா கூறியதாவது:
மடாதிபதி சந்திரசேகர சுவாமிகள், தன் பதவியை விட்டுக் கொடுப்பாரா? விட்டுக் கொடுத்தால் நானே சுவாமிகள் ஆகிறேன். நாளை முதல் காவி உடை அணிகிறேன்.
முதல்வர் பதவியை விட்டுத் தரும்படி, கூறினால், விட்டுக் கொடுக்க வேண்டுமா? சந்திரசேகர சுவாமிகள் எந்த அர்த்தத்தில், அப்படி கூறினார் என்பது தெரியவில்லை. நல்ல நோக்கத்திலா அல்லது கெட்ட நோக்கத்திலா என்பது தெரியவில்லை.
அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. சுவாமிகள் கூறியது சரியா அல்லது தவறா என, நான் விமர்சிக்கவில்லை.
பதவியை விட்டுத் தந்த உதாரணங்கள் உள்ளனவா? அப்படி பார்த்தால் சோனியா மட்டுமே பிரதமர் பதவி வேண்டாம் என்றார். தற்போதைக்கு முதல்வர் நாற்காலி காலியில்லை. துணை முதல்வர் பதவி காலியாக உள்ளது. முதலில் அதை நிரப்பட்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
கட்சியின் தனிப்பட்ட விஷயம்
முதல்வர் பதவி, எங்கள் கட்சியின் தனிப்பட்ட விஷயம். முதல்வர் மாற்றம் குறித்து, பேசுவது சரியல்ல. ஏற்கனவே ஒருவர் பதவியில் உள்ள நிலையில், அதை மாற்றும்படி கூறுவது அர்த்தமற்றது. முதல்வர் சித்தராமையா அனுபவம் மிக்கவர். நேர்மையாக ஆட்சி நடத்துகிறார். சுவாமிகள் ஏன் அப்படி கூறினார் என்பது, எனக்கு தெரியவில்லை.
- தினேஷ் குண்டுராவ்,
அமைச்சர், சுகாதாரத்துறை
அண்ணன் - தம்பி
முதல்வர் பதவி குறித்து, சுவாமிகள் முடிவு செய்ய முடியாது. அவர் தன் கருத்தை கூறியுள்ளார். சித்தராமையாவும், சிவகுமாரும் அண்ணன், தம்பி போன்று உள்ளனர். இருவருக்கும் சரியான முடிவை எடுக்கும் சக்தி உள்ளது. முதல்வர் பதவி குறித்து, எங்கள் கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
- செலுவராயசாமி,
அமைச்சர், விவசாயத் துறை

