முஸ்லிம்களை தவறாக வழிநடத்துவதா? தேடப்படும் பயங்கரவாதிக்கு கண்டனம்
முஸ்லிம்களை தவறாக வழிநடத்துவதா? தேடப்படும் பயங்கரவாதிக்கு கண்டனம்
ADDED : செப் 11, 2024 02:49 AM

புதுடில்லி,: பணமோசடி, வெறுப்பு பிரசார குற்றச்சாட்டுகளில் சிக்கி, மத்திய அரசால் தேடப்படும் நபரான ஜாகிர் நாயக், வக்பு மசோதா குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வக்பு சொத்துகள் நிர்வாகம் தொடர்பான வக்பு திருத்த மசோதா மீது பார்லிமென்டின் கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக, முஸ்லிம் மத பிரசாரகரான ஜாகிர் நாயக் கருத்து தெரிவித்திருந்தார்.
பணமோசடி, வெறுப்பு பிரசாரம், பயங்கரவாதத்தை துாண்டியது என பல வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட அவர், 2016ல், நாட்டில் இருந்து வெளியேறி, ஆசிய நாடான மலேஷியாவில் தஞ்சமடைந்துள்ளார். அவர் தேடப்படும் குற்றவாளியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
வக்பு மசோதா என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது. இது முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதுகுறித்து விசாரிக்கும் பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு முஸ்லிம்கள் கடிதம் அனுப்ப வேண்டும். வரும், 13ம் தேதிக்குள், குறைந்த பட்சம், 50 லட்சம் மனுக்கள் அனுப்பி, எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை வெளிநாட்டில் இருந்து தவறாக வழி நடத்த வேண்டாம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு தங்களுடைய சொந்தக் கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது.
பொய்யான பிரசாரங்கள், தவறான கண்ணோட்டங்களை ஏற்படுத்தி விடும். இதுபோன்ற பொய் பிரசாரங்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.