பிரஜ்வல் மீது பலாத்கார குற்றச்சாட்டு ராகுல் மீது டி.ஜி.பி.,யிடம் ம.ஜ.த., புகார்
பிரஜ்வல் மீது பலாத்கார குற்றச்சாட்டு ராகுல் மீது டி.ஜி.பி.,யிடம் ம.ஜ.த., புகார்
ADDED : மே 22, 2024 10:49 PM

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா, 400 பெண்களை பலாத்காரம் செய்துள்ளார் என்று தவறான தகவலை பரப்பிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என ம.ஜ.த., தரப்பில், மாநில போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகனிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.
ஷிவமொகா, ராய்ச்சூரில் கடந்த மாதம் நடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசுகையில், 'பிரஜ்வல் ரேவண்ணா, 400 பெண்களை பலாத்காரம் செய்துள்ளார். அத்தகைய நபருக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்' என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு, முன்னாள் முதல்வர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். ராகுலுக்கு எதிராக ம.ஜ.த.,வினர் பெங்களூரில் போராட்டமும் நடத்தினர்.
இதற்கிடையில், பகிரங்க பொதுக் கூட்டத்தில் 400 பெண்களை பலாத்காரம் செய்தார் என்று கூறிய ராகுல் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று, பெங்களூரு ம.ஜ.த., தலைவர் ரமேஷ்கவுடா தலைமையில் அக்கட்சியினர் நேற்று, டி.ஜி.பி., அலோக் மோகனிடம் புகார் அளித்தனர்.
புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது:
பிரஜ்வல் ரேவண்ணா, 400 பெண்களை பலாத்காரம் செய்துள்ளார் என்று மே 2ம் தேதி நடந்த பிரசார கூட்டத்தில், வயநாடு காங்., எம்.பி., ராகுல் குற்றம் சாட்டி உள்ளார். அதுவும், கூட்டு கற்பழிப்பு என்று பகிரங்கமாக பேசி உள்ளார்.
ஒரு மக்கள் பிரதிநிதியாக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க செய்வதை விட்டு விட்டு, இத்தகைய பேச்சு பேசி, சட்டத்தை மீறி உள்ளார்.
அவரது பேச்சு மூலம், பலாத்காரம் செய்ததாக கூறப்படும் 400 பெண்களின் விபரம் அவரிடம் உள்ளது. எனவே மாநில அரசு அமைத்துள்ள, சிறப்பு புலனாய்வு குழு, ராகுலுக்கு உடனடியாக சம்மன் அனுப்பி, வரவழைத்து விசாரணை நடத்த வேண்டும்.
400 பெண்களை பலாத்காரம் செய்துள்ளார் என்று தவறான தகவலை பரப்பிய அவர் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

