வாக்குறுதி திட்டங்களால் நெருக்கடி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சு அதிருப்தி
வாக்குறுதி திட்டங்களால் நெருக்கடி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சு அதிருப்தி
ADDED : மார் 04, 2025 04:59 AM

மாண்டியா: “வாக்குறுதித் திட்டங்களால், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது,” என, கே.ஆர்.பேட் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சு குற்றஞ்சாட்டினார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வாக்குறுதித் திட்டங்களால், மாநில அரசு திவால் ஆகியுள்ளது. சாலை பள்ளங்களை மூட வேண்டும். ஆனால் அரசிடம் பணம் இல்லை. தொகுதி மக்களிடம் எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
கெட்ட நேரத்தில் நான் எம்.எல்.ஏ., ஆகியுள்ளேன். என் தொகுதியில் குறைந்தபட்ச மேம்பாட்டுப் பணிகளையும் செய்ய முடியவில்லை. கிராமப்பகுதிகள் மேம்பாட்டுக்கும், அரசு நிதியுதவி வழங்கவில்லை. ஏரிகளை சீரமைக்க, சாலைப் பள்ளங்களை மூடவும் நிதி வழங்கவில்லை.
விவசாயிகளின் சூழ்நிலை, மிகவும் பரிதாபகரமாக உள்ளது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு பள்ளங்கள் தென்படுகின்றன. இத்தகைய சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. சட்டசபையில் வேண்டுகோள் விடுப்பேன். அப்போதும் அரசு பொருட்படுத்தாவிட்டால், விவசாயிகளுடன் சேர்ந்து பாதயாத்திரை நடத்துவேன்.
பாத யாத்திரையை, ம.ஜ.த., இளைஞர் பிரிவு தலைவர் நிகில் குமாரசாமி துவக்கி வைப்பார். போராட்டம் நடத்தி நிதியுதவி பெற முயற்சிப்போம். மாநிலத்தின் பொருளாதார சீர்குலைவுக்கு, வாக்குறுதித் திட்டங்களே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.