அரசியலை ஒதுக்கி வளர்ச்சியை கவனியுங்கள் காங்., அரசுக்கு ம.ஜ.த., தலைவர்கள் அறிவுரை
அரசியலை ஒதுக்கி வளர்ச்சியை கவனியுங்கள் காங்., அரசுக்கு ம.ஜ.த., தலைவர்கள் அறிவுரை
ADDED : ஜூன் 14, 2024 07:34 AM

மாண்டியா: ''மாண்டியா மாவட்டத்தை மேம்படுத்த, எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசியலை ஒதுக்கி வைத்து, வளர்ச்சி பணிகளில் ஆர்வம் காண்பிக்கலாம்,'' என ம.ஜ.த., முன்னாள் எம்.பி., புட்டராஜு அழைப்பு விடுத்து உள்ளார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இத்தனை நாட்களாக மோதியது போதும். லோக்சபா தேர்தல் முடிந்து விட்டது. இனி சண்டை போட வேண்டாம். பரஸ்பரம் விமர்சிக்க தேவையில்லை.
மாண்டியாவை மேம்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசியலை ஓரங்கட்டி வளர்ச்சிக்காக பணியாற்றலாம்.
மத்திய அமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில், முன்னாள் முதல்வர் குமாரசாமி, மத்திய அமைச்சராகி உள்ளார். மாவட்ட மக்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து உள்ளனர்.
வரும் ஞாயிறு அன்று, மாண்டியாவுக்கு குமாரசாமி வருகை தருகிறார். அவரை பாராட்டி கவுரவிக்க ஏற்பாடு செய்து உள்ளோம். மாண்டியா ஸ்டேடியத்தில் வரும் 16 மாலை 5:00 மணிக்கு, பாராட்டு விழா நடக்கும். மாவட்ட மக்களுக்கு குமாரசாமி நன்றி தெரிவிப்பார்.பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினோம்.
இரண்டு கட்சிகளின் தலைவர்களும், நிகழ்ச்சிக்கு வருவர். சுமலதா உட்பட, கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்களையும் அழைப்போம். அன்றைய நிகழ்ச்சியில், ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் வாய்ப்புள்ளது. மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து, குமாரசாமி ஏற்கனவே கூறியுள்ளார். தொகுதி வளர்ச்சிக்கு திட்டம் வகுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நியாயமான முறை
ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., ஸ்ரீகண்டய்யா கூறியதாவது:
மத்திய அமைச்சர் குமாரசாமி, மாண்டியாவுக்கு புதிய வடிவம் கொடுப்பார். புதிய தொழிற்சாலைகள் அமைத்து, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பார்.
மாவட்ட வளர்ச்சியில், அதிக ஆர்வம் உள்ளது. மாண்டியா தொகுதி மக்கள், நியாயமான முறையில் ஓட்டு போட்டனர். மாவட்ட பொறுப்பு அமைச்சர், இத்தனை நாட்களாக பெரிய தவறு செய்துள்ளார்.
இனியாவது விவசாயிகளுக்கு தண்ணீர் தாருங்கள். ஒப்பந்ததாரர் ஒருவருக்கு, வசதி செய்து கொடுக்கும் நோக்கில், விவசாயிகளின் கால்வாயில் தண்ணீர் திறந்து விடவில்லை.
உடனடியாக தண்ணீர் திறந்து விட்டு, தவறை திருத்தி கொள்ளுங்கள். விவசாயிகளை காப்பாற்றுங்கள். காங்கிரசின் தோல்விக்கு, அரசின் குளறுபடிகளே காரணம்.
ஓராண்டாக குமாரசாமியின் கவுரவத்தை குலைப்பதில், அரசு ஈடுபட்டிருந்தது. இதற்கு மக்கள் சரியான பாடம் கற்பித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.