பெண் கடத்தல் வழக்கில் ம.ஜ.த., ரேவண்ணாவுக்கு.நிபந்தனை ஜாமின்! ரூ.5 லட்சம் செலுத்தி உத்தரவு பெற ஆயத்தம்
பெண் கடத்தல் வழக்கில் ம.ஜ.த., ரேவண்ணாவுக்கு.நிபந்தனை ஜாமின்! ரூ.5 லட்சம் செலுத்தி உத்தரவு பெற ஆயத்தம்
ADDED : மே 14, 2024 04:37 AM

பெங்களூரு: முன்னாள் வேலைக்காரப் பெண் கடத்தல் வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணாவுக்கு, பெங்., மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியது. 'கே.ஆர்., நகருக்கு செல்லக் கூடாது, 5 லட்சம் ரூபாய் செலுத்தி உத்தரவு பெற வேண்டும்' உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள் முடித்த பின், சிறையில் இருந்து, இன்று ரேவண்ணா வெளியே வருவார்.
ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவரது வீட்டில் பணிபுரிந்து வந்த ஒரு வேலைக்காரப் பெண்ணை கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
4ம் தேதி கைது
இதுகுறித்து ரேவண்ணா மீது மைசூரு கே.ஆர்., நகர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் மகன் ராஜு, 20, என்பவர், ஏப்ரல் 29ம் தேதி கடத்தல் புகார் அளித்தார். ரேவண்ணாவின் உறவினர் சதீஷ் பாபு என்பவர், தன் தாயை அழைத்துச் சென்றதாகவும் புகாரில் கூறியிருந்தார்.
'சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் பிரஜ்வல் ஆபாச வீடியோக்களில் ஒன்றில், என் தாயின் கை, கால்களை கட்டி பாலியல் தொல்லை கொடுக்கும், ஒரு வீடியோ இருப்பதாகவும், தாயை மீட்டு தர வேண்டும்' என்றும் அவர் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில், ரேவண்ணா, சதீஷ்பாபு ஆகியோர் மீது ஆள் கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், கடத்தியதாக சொல்லப்பட்ட பெண்ணை, மைசூரின் ஹுன்சூர் காளேனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருந்து, சிறப்பு விசாரணை குழு மே 4ம் தேதி மீட்டது.
இதற்கிடையில், முன் ஜாமின் கேட்டு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி சந்தோஷ் பட், தள்ளுபடி செய்தார். இதையடுத்து, பெங்., பத்மநாபநகரில் உள்ள அவரது தந்தை வீட்டில் இருந்த ரேவண்ணாவை எஸ்.ஐ.டி., கைது செய்தது.
சிறையில் அடைப்பு
அவரிடம் நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் பின், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமின் வழங்கக்கோரி ரேவண்ணா சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமின் மனு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி சந்தோஷ் பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ரேவண்ணா தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ், சிறப்பு விசாரணை குழு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜாய்னா கோத்தாரி ஆகியோர் வாதாடினர். இருதரப்பு வாதங்களுக்கு பின், ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தடை
இருவர் உத்தரவாதத்துடன் 5 லட்சம் ரூபாய் செலுத்தி உத்தரவு பெற வேண்டும். சாட்சியங்களை கலைக்கக் கூடாது, விசாரணை குழு ஒத்துழைப்பு தர வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி கே.ஆர்., நகருக்கு செல்லக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை தான் ஜாமின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தீர்ப்பின் நகல், மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும். உத்தரவாதம் செலுத்த வேண்டும். இந்த நடைமுறைகளை முடித்த பின், சிறையில் உத்தரவு சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னரே, சிறையில் இருந்து ரேவண்ணா வெளியே வருவார். இன்று மாலை அவர் வெளியே வருவார் என்று தெரிகிறது.
அவருக்கு ஜாமின் கிடைத்தவுடன், ஹாசன், மாண்டியாவில் ம.ஜ.த., தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

