ம.ஜ.த.,வால் பட்ட காயம் இன்னும் மறக்கலை! கடைசி வரை இறங்கி வராத பிரீத்தம், சுமலதா
ம.ஜ.த.,வால் பட்ட காயம் இன்னும் மறக்கலை! கடைசி வரை இறங்கி வராத பிரீத்தம், சுமலதா
ADDED : மே 03, 2024 06:47 AM

அரசியலில் யாரும் யாருக்கும் நிரந்தர எதிரி, நண்பர்கள் இல்லை என்று சொல்வர். இந்த வார்த்தை கர்நாடகா அரசியல் களத்திற்கு நன்கு பொருந்தும். கர்நாடக அரசியல்வாதிகள் எந்த நேரத்தில், எந்த கட்சியில் இருப்பர் என்று தெரியாது. கர்நாடகாவில் மாநில கட்சியாக ம.ஜ.த., உள்ளது. நிறம் மாறும் பச்சோந்தி போல, தேர்தலுக்கு தேர்தல், காங்கிரஸ் அல்லது பா.ஜ., பக்கம் சென்று விடும்.
கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தனர். இம்முறை பா.ஜ., கூட்டணியில் உள்ளனர். தேவகவுடா குடும்பத்தினர் ராம்நகர், ஹாசன், மாண்டியா மாவட்டங்களில் அரசியல் செய்து வருகின்றனர். இந்த மூன்று மாவட்டங்களையும், தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கின்றனர். ஆனால், அது காங்கிரஸ், பா.ஜ., தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.
வீடு மீது கல்வீச்சு
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் ஹாசன் தொகுதியில், பா.ஜ., வெற்றி பெற்றது. பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ., ஆனார். இதை ம.ஜ.த., தலைவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. பிரீத்தம் கவுடா, அவரது குடும்பத்தை வசைபாடினர். பதிலுக்கு தேவகவுடா, அவரது குடும்பத்தை பிரீத்தம் கவுடா சாடினார்.
இதனால் எம்.எல்.ஏ., என்று கூட பார்க்காமல் பிரீத்தம் கவுடாவின், வீட்டின் மீது ம.ஜ.த., தொண்டர்கள் கல்வீசி தாக்கினர். அவரை பகிரங்கமாக மிரட்டினர்.
கடந்த சட்டசபை தேர்தலில் பிரீத்தம் கவுடாவை எப்படியாவது, தோற்கடிக்க வேண்டும் என்று, ம.ஜ.த.,வினர் கங்கணம் கட்டி சுற்றினர். நினைத்த மாதிரி அவரை தோற்கடித்து காட்டினர். இந்நிலையில் பா.ஜ., கூட்டணியில் ம.ஜ.த.,வை சேர்ப்பதற்கு, ஆரம்பத்தில் இருந்தே பிரீத்தம் கவுடா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவர் பேச்சை பா.ஜ., தலைவர்கள் யாரும் கேட்கவே இல்லை.
ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 'சீட்' கொடுக்கவும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனால் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கினார். பிரீத்தம் கவுடாவை சகோதரர் போன்றவர் என்று கூறி, குமாரசாமி ஐஸ் வைக்க பார்த்தார். ஆனாலும் அவர் மசியவில்லை. இதையடுத்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பிரீத்தம் கவுடாவிடம் சமாதானம் பேசினார். ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாக, கடைசி வரை இருந்தார்.
கட்சி நடவடிக்கை
ஹாசனில் என்ன நடந்ததோ, அதே நிலை தான் மாண்டியாவிலும் இருந்தது. சுயேச்சை எம்.பி., சுமலதா, பா.ஜ., சீட் எதிர்பார்த்தார். ஆனால் கூட்டணியில் இருந்த ம.ஜ.த.,வுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. குமாரசாமி போட்டியிட்டு உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் சுமலதாவை, குமாரசாமி வசைபாடியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சுமலதா பிரசாரத்திற்கு ம.ஜ.த.,வினர் எவ்வளவோ இடைஞ்சல் செய்தனர். ஆனாலும் சுமலதா வெற்றி பெற்று காட்டினார்.
இம்முறை சுமலதாவின் ஆதரவை பெற, அவரது வீட்டிற்கே சென்றார் குமாரசாமி. அக்கா என்று பேசி சுமலதாவின் மனதை கரைக்க முயன்றார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. குமாரசாமியை ஆதரித்து, கடைசி வரை சுமலதா பிரசாரத்திற்கு வரவே இல்லை. இதுமட்டுமின்றி தனது இரண்டாவது மகன் என்று கூறி வரும், நடிகர் தர்ஷனை, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, பிரசாரம் செய்ய வைத்தார் சுமலதா.
இது பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தி உள்ளது. ஹாசன், மாண்டியாவில் பா.ஜ.,வினர் சிலர், எங்களை ஆதரிக்கவில்லை என்று, பிரீத்தம் கவுடா, சுமலதாவை மனதில் வைத்து கூறினார் தேவகவுடா.
இப்போது முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், தேவகவுடாவின் கருத்தை பிரதிபலித்து உள்ளார். இதன்மூலம் பிரீத்தம் கவுடா, சுமலதா மீது எடியூரப்பா கோபத்தில் இருப்பது தெரியவந்து உள்ளது. தேர்தல் முடிந்ததும் அவர்கள் இருவர் மீதும், கட்சி நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழுந்து உள்ளது.
ம.ஜ.த.,வால் தாங்கள் பட்ட கஷ்டத்தை, பிரீத்தம் கவுடாவும், சுமலதாவும் இன்னும் நினைத்து பார்க்கின்றனர். தங்கள் ஆதரவாளர்களிடம், 'ம.ஜ.த.,வால் தான் எங்களுக்கு இந்த வலி. எங்களால் அவர்கள் செய்ததை மறக்க முடியவில்லை. இதை பற்றி எங்கள் தலைவர்களுக்கு தெரியவில்லை. இதை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை' என்று கூறி உள்ளனர்- நமது நிருபர் -.