ADDED : மார் 06, 2025 01:07 AM

மும்பை: மஹாராஷ்டிராவில், முகலாய ஆட்சியாளர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு அசிம் அஸ்மி, பட்ஜெட் கூட்டத்தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த 3ல் துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 26 வரை நடக்கிறது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு அசிம் அஸ்மி, 'அவுரங்கசீப் சிறந்த நிர்வாகி. அவரது ஆட்சியில் நம் நாடு சிறந்து விளங்கியது' என்றார்.
இதற்கு ஆளும் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது. இந்த விவகாரம், மஹாராஷ்டிரா சட்டசபையிலும் எதிரொலித்தது.
'அபு அசிம் அஸ்மியை பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து, தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்' எனக் கோரி, ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், சபை அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, தன் கருத்தை திரும்ப பெறுவதாக அபு அசிம் அஸ்மி தெரிவித்தார்.
இந்நிலையில், மஹாராஷ்டிரா சட்டசபை நேற்று கூடியதும், அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதற்காக அபு அசிம் அஸ்மியை, பட்ஜெட் கூட்டத்தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தாக்கல் செய்தார்.
இது, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் முழுதும், அபு அசிம் அஸ்மி சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்தார்.