தேநீர் விருந்தில் மோடி, ராகுல்: அளவளாவிய எம்.பி.க்கள்
தேநீர் விருந்தில் மோடி, ராகுல்: அளவளாவிய எம்.பி.க்கள்
UPDATED : ஆக 11, 2024 08:41 PM
ADDED : ஆக 09, 2024 08:34 PM

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்ற தேநீர் விருந்தில் மோடி, ராகுல் பங்கேற்று அளவளாவிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
கடந்த ஜூலை 22ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் இன்று (ஆக.09) ஒத்தி வைத்தார் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா.
இன்று பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற தேநீர் விருந்தில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர். இதில் பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோரும் பங்கேற்றனர். இதன் படம் வெளியாகியுள்ளது.
முன்னதாக விருந்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, ராகுல், மற்றும் எம்.பி.க்கள் ஒருவரையொருவர், வரவேற்றனர். இதில் பிரதமர் மோடி , ஓம்பிர்லா, அருகருகே அமர்ந்திருக்க மோடிக்கு வலதுபுறம் நாற்காலியில் ராகுல் அமர்ந்திருந்தார். ராகுல் அருகில் துரை வைகோ மற்றும் , ராகுல் அமர்ந்திருந்த வரிசையில் பா.ஜ.,வின் எல்.முருகன் அமர்ந்திருந்தார்.
அதே வரிசையில் அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, சிராக் பாஸ்வான், பியூஷ் கோயல் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுதிப் பந்தோபாத்யாய், கனிமொழி ஆகியோர் அமர்ந்திருந்தனர். எதிர்வரிசையில் அமித்ஷா, ராஜ்நாத் சிங் அமர்ந்திருந்தனர்.
சில வாரங்களாக பார்லிமென்ட் கூட்டத்தொடரில் லோக்சபா விவாதத்தில் மோடி, ராகுலும் மோதிக்கொள்ள ராகுலின் பேச்சுக்கு அமித்ஷா ஆவேசபட என விவாதங்கள் அனல் பறந்தன இந் நிலையில் இன்று நடந்த தேநீர் விருந்தில் சர்வ கட்சி தலைவர்கள் அளவளாவிய சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.